பயணியை எட்டி மிதித்த போலீஸ் – சஸ்பெண்ட்

கேரளாவில் டிக்கேட் எடுக்காமல் ரயிலில் பயணித்த நபரை எட்டி மிதித்த கண்ணூர் ரயில்வே உதவி துணை ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மங்களூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்ற மாவேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஞாயிற்றுக்கிழமை அன்று…

கேரளாவில் டிக்கேட் எடுக்காமல் ரயிலில் பயணித்த நபரை எட்டி மிதித்த கண்ணூர் ரயில்வே உதவி துணை ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மங்களூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்ற மாவேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஞாயிற்றுக்கிழமை அன்று டிக்கெட் எடுக்காமல் ஒருவர் பயணம் செய்திருக்கிறார். இந்நிலையில், கன்னூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகருடன் இணைந்து ரயில்வே போலீஸ் மற்றும் கேரள போலீஸ் என 3 அதிகாரிகள் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பயணி டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தது தெரியவந்துள்ளது. மேலும், அவர் மது போதையில் பயணித்ததாக சந்தேகங்கள் எழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த உதவி துணை ஆய்வாளர், அவரை எட்டி மிதித்து தள்ளியிருக்கிறார். இதை பார்த்து அருகில் இருந்த டிக்கெட் பரிசோதகரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், ரயிலில் பயணித்த மற்றொருவர், இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததால், அந்த காவலருக்கு கடும் கண்டங்கள் குவிந்தது. இதனையடுத்து, அத்துமீறிய காவல் அதிகாரியை அரசு பணியிடை நீக்கம் செய்தது.

சம்பவம் குறித்து கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், அந்த பயணி மது அருந்தி விட்டு பயணம் செய்ததாகவும், அவரை ரயிலில் இருந்து வெளியேற்றத்தான் அவர் இதை செய்ததாகவும் அந்த காவலர் விளக்கமளித்தார். ஆனால் உடன் பயணித்தவர்கள், அந்த பயணி யாரையும் தொந்தரவு செய்யவில்லை எனவும், மேலும் அவர் மதுபோதையில் இருந்ததாக தெரியவில்லை எனவும் தகவலளித்தனர்.

https://twitter.com/jrkaimalbjp/status/1477910607957430272?t=5P5BXA_eiYS-iHM4QpV__g&s=19

காவலர் இந்தசம்பவம் குறித்து ரயில்வே போலீஸில் புகார் ஏதும் செய்யவில்லை மற்றும் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாக வழக்கு பதிவும் செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்டவர் குடிபோதையில் இருந்தாரா என்பதை அறிய மருத்துவ பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்படவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள முதலமைச்சர் பினராயியின் ஆட்சியில் உள்ள போலீசார்கள், குற்றவாளிகளை விட்டுவிட்டு, சாமானியரிடம் தனது பலத்தை காட்டுவது சரியா எனவும், இப்பிரச்சினையை சட்டரீதியாக எதிர்கொள்வதற்குப் பதிலாக, சாமானியர்கள் மீது தனது ஆதிக்கத்தை காட்டுவது கேரள காவல்துறையின் வாடிக்கையாகி விட்டது எனவும் கேரள பா.ஜ.க தலைவர் எஸ். சுரேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.