தமிழர்களின் தொன்மை பண்பாட்டை உலக அளவில் எடுத்துக்கூற, கீழடி அகழாய்வு தொடர்ந்து நடத்தப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
கலை மற்றும் பண்பாடு அருங்காட்சியகங்கள் தொல்லியல் துறை பதிலுரையில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, உலகத்தரம் வாய்ந்த அகழாய்வாக, கீழடி அகழாய்வு அமைந்துள்ளதாக தெரிவித்தார். தமிழ் மொழியின் தொன்மை 9ம் நூற்றாண்டுக்கு பின்பு தான் என்றும், தனி அடையாளம் கிடையாது என்றும் சிலர் கூறிவந்ததாகவும், ஆனால் பாண்டியன் நெடுஞ்செழியன் வரலாறு கி.மு இரண்டாம் நூற்றாண்டு முன் இருந்தது எனவும், அதே நெடுமானின் வரலாற்றை பார்க்கும் போது கி.மு 5ம் நூற்றாண்டு என்றும், கீழடி ஆய்வு வந்த பின்பு கி.மு 6ம் நூற்றாண்டு என்றும் தெரிவிக்கப்பட்டது என்றார்.
அந்த நூற்றாண்டில் தமிழன் படிப்பறிவு, எழுத்தறிவு சிறந்து விளங்கியது என்றும், கங்கை சமவெளி நாகரிகத்தைப் போன்று வைகை சமவெளியும் இருந்துள்ளது எனவும், அகழாய்வு தொடர்ந்து நடத்தப்பட்டு தமிழனின் தொன்மை பண்பாட்டை உலக அளவில் எடுத்துச் செல்லப்படும் எனத் தெரிவித்தார். அதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், நாட்டுப்புற கலை, இளைஞர்களின் இசை நிகழ்ச்சி மீட்டெடுக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.







