விபத்தில் சிக்கி உடல்நலம் தேறிய நிலையில் மருத்துவமனையில் இருந்து காதலியை பார்க்க சென்ற இளைஞரை தாக்கி மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பிய 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் லட்சுமணன் கார்த்திக் (20). இவர் அம்பத்தூர் மண்ணூர்பேட்டையை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை காதலித்து
வந்துள்ளார்.
இதனால் அதே பகுதியை சேர்ந்த சூரியன் (21), அருண் (19), சுதாகர் (20) ஆகியோர்
லட்சுமணன் கார்த்திக்கிடம் ஏரியா பெண்ணை லவ் பண்றியா என கேட்டு பிரச்னை செய்ததாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக கடந்த ஓராண்டாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சிறிது நாட்களுக்கு முன் விபத்தில் சிக்கிய லக்ஷ்மணன்
கார்த்திக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல் நலம்
தேறியதால் வீட்டிற்கு செல்லும் பொழுது வழியில் காதலியை பார்ப்பதற்காக
மண்ணூர்பேட்டைக்கு அவர் சென்றுள்ளார்.
தகவல் அறிந்த சூரியன் (21), அருண் (19), சுதாகர் (20) ஆகியோர் லட்சுமணன்
கார்த்திக்கை தாக்கியுள்ளனர். இதனால் நிலை குலைந்த லட்சுமணன்
கார்த்திகை மீட்ட அக்கம்பக்கத்தினர், அருகே உள்ள தனியார் மருத்துவமனையில்
அனுமதித்தனர்.
இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அம்பத்தூர் தொழிற்பேட்டை
போலீசார், லட்சுமணன் கார்த்திகை தாக்கிய சூரியன், அருண், சுதாகர்
ஆகிய மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.







