கரூர் வீரணம்பட்டி கோயில் திருவிழாவில் இரு சமூகத்தினரியடையே ஏற்பட்ட மோதலையடுத்து உரிய விசாரணையின்றி சீல் வைக்கப்பட்டதாக கூறி கோட்டாட்சியருக்கு எதிராக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து மனு அளித்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலையடுத்த வீரணம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீகாளியம்மன் கோயில்.இக்கோயில் திருவிழா ஜூன் 7ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கோயில் திருவிழாவின்போது பட்டியலின சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கோயிலுக்குள் சென்றுள்ளார். அவரை மாற்று சமூகத்தை சேர்ந்த சிலர் மறித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதனையடுத்து கோட்டாட்சியர் கோயிலை பூட்டி சீல் வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த கோயிலுக்கு பாத்தியப்பட்ட சமூக மக்கள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கோட்டாட்சியர் உரிய விசாரணையின்றி நடவடிக்கை
எடுத்ததாகவும், மேலும் பட்டியலின சமூகத்தை சேர்ந்த சக்திவேல் திட்டமிட்டே இவ்வாறு செய்ததாகவும் கூறுகின்றனர்.
மேலும் கோட்டாட்சியர் வந்தப்போது அவரது வாகனம் மோதியதில் 17வயது சிறுமி ஒருவர் காயமடைந்தார் எனவும் கூறி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்திருந்தனர்.
இதனையடுத்து ஊர் முக்கிய நிர்வாகிகள் பத்து பேர் மட்டும் உள்ளே சென்று வட்டாட்சியர் முனிராஜிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். இதுதொடர்பாக அவ்வூர் மக்கள் கூறுகையில், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தங்களுடைய அரசு அடையாள ஆவணங்கள் அனைத்தையும் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தனர்.
வேந்தன்







