சட்ட விரோதமாக தோண்டப்படும் கல்குவாரிகள் – குடிநீருக்கு கையேந்தும் நிலையில் பொதுமக்கள்!

ஆலங்குளத்தில் சட்டவிரோதமாக கல்குவாரிகளில் அளவுக்கு அதிகமாக குழி தோண்டி கற்கள் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து பொதுமக்கள் குடிநீருக்கு கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக தேமுதிகவினர், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளித்துள்ளனர். தென்காசி மாவட்ட…

ஆலங்குளத்தில் சட்டவிரோதமாக கல்குவாரிகளில் அளவுக்கு அதிகமாக குழி தோண்டி கற்கள் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து பொதுமக்கள் குடிநீருக்கு கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக தேமுதிகவினர், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளித்துள்ளனர்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள்
குறைதீர்ப்பு முகாமில் தென்காசி மாவட்ட தேமுதிக சார்பில் மனு ஒன்று
அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், தென்காசி மாவட்டம் ஆலங்குளம், கடையம் உள்ளிட்ட சுற்றுவட்டார
பகுதிகளில் ஏராளமான கல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. கல் குவாரிகளில் சட்ட விரோதமாக அரசு நிர்ணயம் செய்த அளவைவிட கூடுதலாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு ஒரு கோடி டன்களுக்கு மேலாக கேரளாவிற்கு அனுமதி இல்லாமல்  ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றனர்.

இதனால், அரசுக்கு இழப்பு ஏற்பட்டு வரும் சூழலிலும் அதனை அதிகாரிகள் கண்டு
கொள்வதில்லை.அதேபோல், அளவுக்கு அதிகமாக குழி தோண்டி கற்களை வெட்டி எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டமானது வெகுவாக குறைந்து ஆலங்குளம், கடையம் சுற்று வட்டார கிராம பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் குடிநீருக்கு கையேந்தும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், இது தொடர்பாக உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு சட்ட விரோதமாக
குவாரிகளில் கற்களை வெட்டி எடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, கேரளாவிற்கு கல், மண், ஜல்லி உள்ளிட்ட பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த மனுவை பெற்று கொண்ட தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன், இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.

ம.ஶ்ரீ.மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.