அரசு தொடக்கப் பள்ளியில் சிறுதானிய உணவு கண்காட்சி-பாரம்பரிய உணவுகளை ஆச்சரியத்துடன் பார்த்த மழலைகள்!

கரூர் மாவட்டம் க.பரமத்தி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற சிறுதானிய உணவு கண்காட்சியை மழலைகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். உலகம் அறிவியல் வளர்ச்சியால் அதிவேகமாக இயங்கி வருகிறது. காலச் சக்கரத்தின் சுழற்சியில்…

கரூர் மாவட்டம் க.பரமத்தி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற சிறுதானிய உணவு கண்காட்சியை மழலைகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

உலகம் அறிவியல் வளர்ச்சியால் அதிவேகமாக இயங்கி வருகிறது. காலச் சக்கரத்தின் சுழற்சியில் நம்முடைய உணவு பழக்க வழக்கங்களும் முற்றிலுமாக மாறிப் போய்விட்டன. துரித உணவுகளால் தினம்தினம் புதுப்புது நோய்கள் பரவி வருகின்றன.  நம்முடைய வாழ்க்கையில் பின்னி பிணைந்திருந்த எத்தனையோ உணவுகள் சத்தாக இருந்தவை இன்று மறக்கடிக்கப்பட்டு விட்டன.

இந்நிலையில் சிறு தானிய உணவுகள் குறித்த விழிப்புணர்வை இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் விதமாக ஐநா சபை 2023ம் ஆண்டை சர்வதேச சிறு தானிய உணவு ஆண்டாக அறிவித்தது. இதனை முன்னிட்டு கரூர் மாவட்டம் க.பரமத்தியிலுள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட சிறு தானிய உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இதனை பள்ளியில் பயிலும் 500-க்கும் அதிகமான மழலை செல்வங்கள் ஆர்வத்துடனும், ஆச்சரியத்துடனும் கண்டு ரசித்தனர். இக்கண்காட்சியில் குதிரைவாலி,  கம்பு, ராகி, பயிறு வகைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான தானியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

மேலும் சிறு தானிய உணவின் நன்மைகள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.  நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் நீலகண்டன், கல்வி அலுவலர் அசோகன், ஆசிரிய பெருமக்கள் உள்ளிட்ட திரளானவர்கள் பங்கேற்றனர்.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.