தவெக தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப். 27ஆம் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது திரண்டிருந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் இதுவரை தவெக நிர்வாகிகளான என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல்குமார், மதியழகன் ஆகியோர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரிக்கப்பட்டனர்.
இந்த சூழலில் தவெக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பிய சிபிஐ நேரில் ஆஜராகும்படி அறிவுறுத்தியது. அதன் படி கடந்த ஜனவரி 12ஆம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து தவெக தலைவர் விஜய்க்கு, மீண்டும் இன்று விசாரணைக்கு ஆஜராக கூறி சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மனையும் ஏற்று விஜய் இன்று டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.
அப்போது சிபிஐ அதிகாரிகள் விஜயிடம் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். விசாரணையில் சிபிஐ அதிகாரிகள் தரப்பில் விஜயிடம் அளவுக்கு அதிகமாக கூட்டம் வந்ததை நிர்வாகிகள் கவனிக்கவில்லையா?. அவ்வளவு நெரிசலிலும் வாகனத்தை முன்னே செலுத்தியது ஏன்? என்பன போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது. இந்த கேள்விகளுக்கு விஜய் அளித்த பதிலை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ நடத்திய விசாரணை தற்போது நிறைவு பெற்றுள்ளது. விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து விஜய் காரில் புறப்பட்டு சென்றுள்ளார்.







