கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு காவிரியில் வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ் அணையில் தற்போது 105 புள்ளி 76 அடி உயரத்திற்கு நீர் இருப்பு உள்ளது. தொடர் மழையின் காரணமாக அணைக்கு 30 ஆயிரத்து 776 கனஅடி நீர் வரத்து உள்ள நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கபினி அணையில் இருந்து 30 ஆயிரம், கன அடி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தற்போது கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.







