உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின் படியும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை உறுதி செய்யக்கோரி தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கில் கர்நாடகா அரசு குறுகிய பதில் மனுவும் அதற்கு தமிழக அரசு விளக்க மனுவும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளன.
அதன்படி கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள குறுகிய பதில் மனுவில், கடந்த ஜூலை 30ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழகத்துக்கு நீர் ஏற்கானவே திறந்து விடப்பட்டுவிட்டது. ஆனால் நீர் பற்றாக்குறையான வறட்சி காலங்களில் உச்ச நீதிமன்றம் வரையறுத்த நீரை திறந்து விட கோருவது நியாயமானது அல்ல, நீர் பற்றாக்குறை ஆண்டில், கள எதார்த்தத்தை கணக்கில் கொண்டு நீர் வழங்க உத்தரவு விட வேண்டுமே தவிர நீர் பகிர்வு விகிதாசார அடிப்படையில் உச்ச நீதிமன்றம் வரையறை செய்த நீரை திறந்துவிட கூறுவது ஏற்புடையது அல்ல.
காவிரி நதி என்பது, பருவ மழையை நம்பியுள்ள நதி ஆகும், அந்த வகையில் நடப்பாண்டில் எல் நினோ காரணமாக நீர் வரத்து இல்லாத வறட்சி காணப்பட்டது, இதை கருத்தில் கொள்ளாமல் காவிரி மேலாண்மை ஆணையம் , கடந்த ஜூலை 30ம் தேதி பிறப்பித்த உத்தரவு என்பது ஏற்று கொள்ள முடியாதது. மேலும், ஜூலை 30ம் தேதி 3500 கன அடி விதம் நீரை திறக்க வேண்டும் என்ற உத்தரவு செயல்படுத்தப்பட்டு விட்டதால், தமிழகத்தின் மனுவை ஏற்க தேவை இல்லை.
அதே வேளையில், ஆகஸ்ட் 11ம் தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கூட்டத்தில், வினாடிக்கு 12, 000 கன அடி நீர் வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்ய உள்ளதாக கர்நாடக அரசு தனது குறுகிய பதில் மனுவில் கூறியுள்ளது. கர்நாடகத்தின் பதில் மனுவுக்கு விளக்கமளித்துள்ள தமிழக அரசு, அணைகளில் தேவைக்கு அதிகமாகவே தண்ணீரை வைத்துக் கொண்டு தமிழகத்துக்கு திறந்த விட கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. குறிப்பாக தமிழகத்துக்கு தற்போது வரை 35 டிஎம்சி தண்ணீரை திறந்திருக்க வேண்டும். ஆனால் அதில் 15 சதவீதம் கூட கர்நாடகம் கொடுக்கவில்லை..
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா அரசு அமல்படுத்துவது கிடையாது, அதன் காரணமாக தான் தமிழக அரசு ஒவ்வொரு முறையும் நீரை பெறுவதற்கு நடத்திய சட்ட போராட்டங்கள் மூலம் அறிய முடியும். எனவே,காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் கர்நாடகா அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவை நிராகரிப்பதோடு, கடந்த 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அரசு தண்ணீர் திறப்பதை உறுதி செய்ய வேண்டுமென்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.




