கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கி சூட்டில் தமிழர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் கர்நாடக எல்லைப் பகுதியில் சேலம் மாவட்ட எஸ்பி சிவகுமார் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கோவிந்தவாடியைச் சேர்ந்த ராஜா, இளையபெருமாள் மற்றும் தருமபுரி மாவட்டம் ஏமனூரைச் சேர்ந்த ரவி ஆகிய மூன்று பேரும் காவிரியாற்றை பரிசல் மூலம் கர்நாடக வனப்பகுதியில் மான்வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டு வந்த கர்நாடக வனத்துறை இவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனிடையே தமிழகத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் தமிழக மற்றும் கர்நாடக எல்லைப் பகுதியில் சேலம் மாவட்ட எஸ்பி சிவகுமார் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கர்நாடக வனத்துறை மற்றும் காவல் துறையினரின் தீவிர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதனையும் படியுங்கள் : துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
தமிழகத்தில் இருந்து கர்நாடகம் மாதேஸ்வர மலைக்கு வழக்கமாக பேருந்துகள் செல்ல ஏற்பாடு செய்துள்ளதாகவும், அசம்பாவித சம்பவங்களை தடுக்க 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சேலம் எஸ் பி சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கர்நாடக மாநில மண்டல வன அதிகாரி நதிஷ் கூறுகையில் “பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் என்ன நடத்து என தெரிய வரும். அதுவரையில் எதுவும் கூற முடியாது. 15 ம்தேதி சம்பவம் நடைபெற்றுள்ளது விசாரணை பிறகு என்ன நடத்து என தெரியவரும்” என தெரிவித்துள்ளார்.
இதனிடையே கர்நாடக மண்டல வன அதிகாரி நதிஷ் உடன் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தித்து துப்பாக்கிச் சூடு நடந்தது தொடர்பாக விவரங்களை நேரில் கேட்டு அறிந்தார்.
– யாழன்







