தென்னிந்தியாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலமான கர்நாடகத்தில் வரும் 10ம் தேதி வாக்குப்பதிவும், 13ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி, பாரத் ராஷ்ட்ர சமீதி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 2,613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மும்முனைப் போட்டி என்றாலும் பாஜக – காங்கிரஸ் இடையில்தான் கடும் போட்டி என்கிறார்கள். கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான 113 இடங்களில் எந்த கட்சியும் வெற்றி பெறவில்லை. ஆனால், அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்கிற வகையில் பாஜக ஆட்சி அமைத்தது. ஒருவாரம் கூட நீடிக்காத நிலையில், பெரும்பான்மையை நிருபிக்க முடியாமல் ஆட்சியை விட்டு இறங்கியது. குறைந்த இடங்களில் வெற்றி பெற்றாலும் முதலமைச்சரான மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் எச்.டி.குமாரசாமியின் ஆட்சி ஓராண்டில் கவிழ்ந்தது. எம்.எல்.ஏக்கள் சிலர் அணி மாற மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பாஜக – காங்கிரஸ் தீவிரம்
இந்த பின்னணியில், தற்போது நடைபெறும் தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான தனிப் பெரும்பான்மையை பெற வேண்டும் என்று காங்கிரஸ், பாஜக இருகட்சிகளும் தீவிர முனைப்பில் உள்ளன. அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுக்கு முன்னர் நடைபெறும் தேர்தல் என்பதால் கர்நாடக தேர்தல் முடிவுகள் தேசிய அளவிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பாஜக, காங்கிரஸ் ஆகிய இருகட்சிகளும் எதிர்பார்த்து காத்துள்ளன.
தலைவர்களின் பிரச்சாரம்
பாஜக வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேச, மகாராஷ்டிரா முதலமைச்சர்களின் பிரச்சாரம், காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா, இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் முதலமைச்சர்கள் பிரச்சாரம் செய்தது இந்த தேர்தலின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பே
இருகட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. இந்த தேர்தலில் கட்சிகளின் தேர்தல் அறிக்கையும் அதில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளும் பேசுபொருளாகியுள்ளன. அந்தளவிற்கு தேர்தல் அறிக்கைக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.
மக்களை கவரும் வாக்குறுதிகள்
குறிப்பாக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 10 கிலோ அரிசி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் உதவித் தொகை, வேலையில்லா பட்டதாரிகள் ரூ.3 ஆயிரம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அறிவித்துள்ளது. இது மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், அதை ’வெற்று வாக்குறுதிகள்’ என்று கூறிய பாஜக தனது தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வருடத்தில் மூன்று இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள், தினமும் அரை கிலோ நந்தினி பால், மாதந்தோறும் ஐந்து கிலோ தானியம், வீடற்ற ஏழைகளுக்கு பத்து லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளையும் இலவசங்களையும் அறிவித்து, அதிர்ச்சியளித்தது. அந்தளவிற்கு தேர்தல் அறிக்கையில் கவனம் செலுத்தியது பாஜக.
களமிறங்கிய தமிழர்கள்
இந்த தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும். தேர்தலை தங்களுக்கான கவுரவ பிரச்னையாக இருகட்சியும் பார்க்கிறது. பெங்களூரு, காந்தி நகர், புலிகேசி நகர், கோலார் தங்க வயல் உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வாக்கை குறிவைத்து தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களும் களமிறங்கினர். குறிப்பாக தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை. விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் செல்லகுமார், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உள்ளிட்டோரும் அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி இரண்டு முன்னாள் அதிகாரிகள் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்காக தீவிரம் காட்டி வருவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வியூகம் வகுத்த முன்னாள் அதிகாரிகள்
கர்நாடகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி பாஜகவில் இணைந்த அண்ணாமலை ஐபிஎஸ், பல்வேறு துறைகளில் பணியாற்றி காங்கிரஸில் இணைந்த சசிகாந்த் செந்தில் ஐ.ஏ.எஸ் ஆகிய இருவரும்தான் அது. வேட்பாளர் தேர்வு, கட்சித் தலைவர்களின் தீவிரப் பிரச்சாரம், உள்ளூர் பிரச்னைகள் முதல் தேர்தல் வாக்குறுதிகள் வரை கவனம், தொகுதி, பகுதிவாரியாக வாக்கு சேகரிப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை அளித்துள்ளனர்.
இந்த இருவரில் யாருடைய வியூகம் வெல்லும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தமிழர்கள், தமிழ்நாட்டு தலைவர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் நேரடியாக களமிறங்கியுள்ள இந்த தேர்தலில் வெற்றிக்கனி யாருக்கு…?
கருத்துக் கணிப்புகளைக் கடந்து, மக்கள் தீர்ப்பு எதுவாக இருக்கும்…? ஆட்சியைத் தக்க வைக்குமா பாஜக? தட்டிப் பறிக்குமா காங்கிரஸ்? காத்திருப்போம் மே 13 ஆம் தேதி வரை…