கர்நாடக சட்டசபை தேர்தல் 2023, ஆளும் கட்சியான பாஜகவுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும், முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்…
தென்மாநிலங்களில் பாஜகவை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்த மாநிலம், காங்கிரஸ் கட்சி அமைப்பு ரீதியாக வலுவாக உள்ள மாநிலம், ஜனதா இயக்கங்களுக்கு எப்போதும் உயிரளிக்கும் மாநிலம் என சிறப்புற்று நிற்கிறது கர்நாடகா. அடுத்த ஆண்டில் நடைபெறும் மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாகவும் கர்நாடக தேர்தல் 2023 பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பசவராஜ் பொம்மை முதலமைச்சராக உள்ளார். இம்மாநில சட்டசபையின் ஆயுட்காலம் விரைவில் முடிவடைகிறது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்கு வாக்காளர்களின் எண்னிக்கை 5,31,33,054. ஆண் வாக்காளர்கள் 2,67,28,053 பேர், பெண் வாக்காளர்கள் 2,64,00,074 பேர், மூன்றாம் பாலினத்தவர் 4,927 பேர்.
இந்த தேர்தலுக்காக 58,545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மே 10 ஆம் தேதி, காலை 7:00 மணிக்கு தொடங்கி, மாலை 6:00 மணி வரை வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை 75,603. கட்டுப்பாடு கருவிகளின் எண்ணிக்கை 70,300. விவிபேட் கருவிகள் 76,202.
பாஜக சார்பில் 224 பேர், காங்கிரஸ் சார்பில் 223 பேர், மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் 209 பேர், இதைத்தவிர ஆம் ஆத்மி, ஸ்டிபிஐ, ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி என மொத்தம் 2,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆண் வேட்பாளர்கள் 2,430 பேர், பெண் வேட்பாளர்கள் 184 பேர். மாற்றுத் திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்காக முதல் முறையாக, வீடுகளுக்கே சென்று வாக்குப்பதிவு செய்யும் முறையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வாக்களிக்கின்றனர்.
மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், மே 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோர் அனல் பறக்கும் வகையில் தீவிர களப்பணியுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா, எடியூரப்பா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர்கள் என முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கு கொண்டனர். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி, மூத்த தலைவர் இப்ராஹிம் உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர்.
கர்நாடகத்தில் 38 ஆண்டுகளாக, ஆளும் கட்சி, தொடர்ச்சியாக மீண்டும் ஆட்சியமைக்கவில்லை என்ற வரலாறு தொடர்கிறது. எங்களுக்கே தேர்தல் களத்தில் வெற்றி என்று பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூறி வருகின்றன. ஆட்சியமைப்பது யார்? மே 13 ஆம் தேதி வரை காத்திருப்போம்….
– ரா.தங்கபாண்டியன், நியூஸ் 7 தமிழ்








