கர்நாடக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
கர்நாடக சட்டப்பேரவையில், கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதா கடந்த இருநாட் களுக்கு முன், தாக்கல் செய்யப்பட்டது. மசோதா விவாதத்திற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டதை அடுத்து கடும் அமளி ஏற்பட்டது. இந்த சட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அந்தக் கட்சியின் மாநில தலைவர் டிகே சிவகுமார், சட்ட நகலை கிழித்து வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்த மசோதா மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. இச்சட்டம் மக்களுக்கு விரோதமானது என்றும் மனிதாபிமானமற்றது என்றும் கூறி காங்கிரஸ் கட்சி இன்றும் கடுமையாக எதிர்த்தது. இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான சித்தராமையாவும் கர்நாடக சட்ட அமைச்சர் ஜே.சி.மதுசுவாமியும் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மதமாற்ற எதிர்ப்பு மசோதா என்று பொதுவாக அழைக்கப்படும் இது, கர்நாடக மத சுதந்திர உரிமை மசோதா 2021 என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது. பட்டியல் இனத்தவர்கள், சிறுவர்கள் மற்றும் பெண்களை கட்டாயமாக மதமாற்றம் செய்தால், அதிகபட்சமாக 10 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்குவது உட்பட பல சர்ச்சைக்குரிய விதிகள் இதில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஒப்புதலையடுத்து மசோதா சட்டமாக அமலுக்கு வர இருக்கிறது.
மசோதாவை நிறைவேற்றுவது குறித்து விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. கர்நாடக மாநிலத்தில் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தேவாலயம் இன்று அதிகாலை, மர்மநபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.








