ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கை குறித்து சுகாதார அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.
உலகைத் தாக்கிய கொரோனா வைரஸ் விதவிதமாக உருவாறி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் என்ற உருமாறிய வைரஸ், உலக நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால், பல்வேறு நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. வழக்கமான கொரோனாவை விட வேகமாக பரவும் தன்மை கொண்டதால் இந்த ஒமிக்ரான் வேகமாக பரவி வருகிறது. ஒரே மாதத்தில் இந்த வைரஸ் 106 நாடுகளில் பரவிவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலும் ஒமிக்ரான் வேகமாக பரவி வருகிறது. அதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளை மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த தொற்று பரவலை தடுப்பதற்கான வழிவகைகள் குறித்து பிரதமர் மோடி, சுகாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துதல், பூஸ்டர் டோஸ், ஒமைக்ரான் பரவல் அதிகமுள்ள பகுதிகளில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா? பொது இடங்களில் கட்டுப்பாடுகள் அதிகரித்தல் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.








