கன்னியாகுமரியில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம் – சாலைகள் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி!

கன்னியாகுமரி மாவட்டம் மாங்காய்விளை பகுதியில் ஓடைகளை முறையாக தூர்வாராததால் அப்பகுதியிலுள்ள வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலையை அடுத்த மாங்காய்விளை பகுதியில் நூற்றுக்கும்…

கன்னியாகுமரி மாவட்டம் மாங்காய்விளை பகுதியில் ஓடைகளை முறையாக தூர்வாராததால் அப்பகுதியிலுள்ள வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலையை அடுத்த மாங்காய்விளை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த ஊரில் இருந்து நாகர்கோவில்-திருவணந்தபுரம் நெடுஞ்சாலை செல்வதற்கும், மார்த்தாண்டம் செல்வதற்கும் என இரு இணைப்பு சாலைகள் உள்ளன. இச்சாலையை ஓட்டி ஊரிலுள்ள குளத்திற்கு தண்ணீர் செல்வதற்காக ஓடை ஒன்றும் அமைந்துள்ளது.

இந்நிலையில் இந்த ஓடையை கடந்த எட்டு ஆண்டுகளாக முறையாக தூர்வாரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஓடை முழுவதும் புதர் மண்டி காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகளில் மெல்ல,மெல்ல தண்ணீர் தேங்க துவங்கியுள்ளது.

இந்த மழை நீர் ஓடையை முறையாக தூர்வாரத காரணத்தினால் ஓடை முழுவதும் மேடுகளாக காணப்படுவதால் தண்ணீர் சாலைகளில் குளம் போல் தேங்கியுள்ளது.

மேலும் அப்பகுதியிலுள்ள தாழ்வாரங்களில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் கடும் அவதியடைந்துள்ளனர்.எனவே போர்க்கால அடிப்படையில் ஓடைகளை தூர்வார வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.