FlashBack: கண்ணதாசன் அதிகம் விரும்பிய இசை அமைப்பாளர்!

மெட்டுக்கு பாட்டா, பாட்டுக்கு மெட்டா என்பது காலகாலத்துக்கும் தொடரும் கேள்வி. இன்றும் அப்படியே இருக்கிறது, அந்த சுவாரஸ்ய வாக்குவாதம். பாடல் வரிகள், எப்படி பாடலாசிரியர்களின் படைப்போ, மெட்டு என்பது இசை அமைப்பாளர் களின் கிரியேஷன்.…

மெட்டுக்கு பாட்டா, பாட்டுக்கு மெட்டா என்பது காலகாலத்துக்கும் தொடரும் கேள்வி. இன்றும் அப்படியே இருக்கிறது, அந்த சுவாரஸ்ய வாக்குவாதம்.

பாடல் வரிகள், எப்படி பாடலாசிரியர்களின் படைப்போ, மெட்டு என்பது இசை அமைப்பாளர் களின் கிரியேஷன். பாடல் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம் இசையும். ட்யூன் ’தனன தனன’ என்றிருந்தால், ’அடடா அடடா’/ ’அழகே அழகே’ என்பது போன்ற வார்த்தை களை, பாடலாசிரியர்கள் நிரப்பலாம். ஆனால் ’அழகான அழகான’ என வார்த்தைகளை போட்டால், அது மீட்டர் மீறல். இங்குதான் பாடலாசிரியருக்கும் இசை அமைப்பாளருக்கும் பிரச்னை வரும் என்கிறார்கள்.

அதாவது, ’இது நல்லவரி, கொஞ்சம் மீட்டரை அட்ஜஸ்ட் பண்ணுங்களேன்’ என்று பாடலாசி ரியர்கள் ரெக்யூக்ஸ்ட் பண்ணலாம். இது பாடல் பஞ்சாயத்து. இந்தப் பிரச்னைகள் வராமல் பார்த்துக்கொள்ளும் இசை அமைப்பாளர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் பாடலை வாங்கிவிட்டு இசை அமைப்பவர்கள்.

ட்யூன் என்கிற மீட்டருக்கு எழுதுவதை விட அது இல்லாமல் சுதந்திரமாக எழுதுவது எளிது. அதனால், பாடலாசிரியர்கள் எழுதி இசை அமைப்பதையே, அதிகம் விரும்புகிறார்கள்.

அந்த வரிசையில், அந்த கால இசை அமைப்பாளர் கே.வி.மகாதேவன் முக்கியமானவர். இவருக்குப் பாட்டெழுவதை கவிஞர் கண்ணதாசன் அதிகம் விரும்புவார் என்கிறார்கள். அனைத்து இசை அமைப்பாளர்களையும் அவரும் அவரை அனைத்து இசை அமைப் பாளர்களும் விரும்புவார்கள் என்றாலும் கண்ணதாசனுக்கு, கே.வி.மகாதேவன் ’அதுக்கும் மேல’ டைப்.

கிருஷ்ணன் கோயில் (நாகர்கோயில்) வெங்கடாசலம் மகாதேவன்தான் கே.வி.மகாதேவன். தமிழ், தெலுங்கு, கன்னடம் என சுமார் ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்தவர். தமிழில் மட்டும் 218 படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார் என்கிறது wiki.

1942 ஆம் ஆண்டு ‘மனோன்மணி’ என்ற படத்துக்கு முதன்முதலாக இசை அமைத்தவர், ஏராளமான சாகாவரம் பெற்ற சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார்.

உதாரணத்துக்கு, ’தில்லானா மோகனாம்பாள்’!. ’நலம்தானா?’ வும் ’மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன?’வும் இப்போதும் நம்மைப் பார்த்துக் கேட்பது போலவே இருக்கிறது. இன் னொரு உதாரணம், ’வசந்த மாளிகை’. ’ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்’ பாடலும் ’மயக்கம் என்ன ?’வும் இன்னும் மனதை மயக்கத்திலேயே வைத்திருக்கின்றன.

படத்தின் காட்சிகளை இயக்குநர் விளக்கியதும் எழுதச் சொல்லிவிடுவார் கே.வி.மகா தேவன். பாடல்களை வாங்கிவிட்டு அறையை பூட்டிவிடும் கே.வி.மகாதேவன், ஒவ்வொரு பாடலுக்கும் இரண்டு மூன்று ட்யூன் போட்டுவிட்டு இயக்குநர், தயாரிப்பாளரை அழைத்துப் போட்டிக் காட்டுவார். அதில் ஒன்றைத் தேர்வு செய்வார்களாம். அப்படி வந்ததுதான் முத்து முத்தான பல பாடல்கள்.

-ஏக்ஜி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.