மறைந்த கன்னட லிட்டில் சூப்பர் ஸ்டார் புனித் வீட்டில் தொடரும் சோகம் – விஜய் ராகவேந்திரா மனைவி மாரடைப்பால் மரணம்!

கன்னட நடிகர் விஜயராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 41.  கன்னட திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் விஜய ராகவேந்திரா. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான…

கன்னட நடிகர் விஜயராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 41. 

கன்னட திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் விஜய ராகவேந்திரா. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். இவரின் மனைவி ஸ்பந்தனா. இவர் பெங்களூரில் பிறந்தவர். இவரது தந்தை பி.கே.சிவராம் போலீஸ் கமிஷனராக இருந்து ஓய்வு பெற்றவர். விஜய் மற்றும் ஸ்பந்தனா 26 ஆகஸ்ட் 2007 அன்று திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு சௌர்யா என்ற மகன் உள்ளார்.

விஜய ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா கடந்த 2016-ம் ஆண்டு வெளிவந்த அபூர்வா என்ற திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த விஜய ராகவேந்திரா, சில நாட்கள் குடும்பத்துடன் ஓய்வு எடுப்பதற்காகவும், தனது 16-வது திருமண நாளை கொண்டாடுவதற்காகவும் தன் மனைவி மற்றும் மகன் உடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்தார்.

சுற்றுலா சென்ற இடத்தில் ஸ்பந்தனாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுற்றுலா போன இடத்தில் விஜய ராகவேந்திராவின் மனைவி மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் கன்னட திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அவரது உடலை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 8) பெங்களூரு கொண்டு வர இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளன. ஸ்பந்தனாவின் தந்தை பி.கே.சிவராமும், சகோதரர் ரக்ஷித் சிவராவும் ஏற்கனவே பாங்காக் சென்றுவிட்டனர்.

விஜய ராகவேந்திரா – ஸ்பந்தனா ஜோடி தங்களது 16வது திருமண நாளை கொண்டாட இன்னும் 19 நாட்களே இருந்த நிலையில் இப்படி ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

டாக்டர் ராஜ்குமார் குடும்பத்திற்கு மேலும் ஒரு அதிர்ச்சி;

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் குடும்பம் ஒன்றன் பின் ஒன்றாக 
அதிர்ச்சியை சந்தித்து வருகிறது. அக்டோபர் 29, 2021 அன்று, நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் இறந்தார். சில மாதங்களுக்கு முன்பு ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாவின் சகோதரர் ஸ்ரீனிவாஸ் பத்ரா துருவன் விபத்தில் கால் துண்டிக்கப்பட்டார். 
தற்போது பர்வதம்மா ராஜ்குமாரின் சகோதரர் சிவராமின் மகள் ஸ்பந்தனா 
மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பந்தனா 2016 இல் திரையுலகில் நுழைந்தார். வி. ரவிச்சந்திரன் என்பவர் இயக்கிய ‘அபூர்வா’ படத்தில் நடித்தவர் ஸ்பந்தனா, அந்தப் படத்தில் விஜய் ராகவேந்திராவின் மனைவியாக நடித்திருந்தார். மேலும் விஜய் ராகவேந்திரா நடித்து இயக்கிய ‘கிஸ்மத்’ படத்தை ஸ்பந்தனா தயாரித்தார்.

மனைவியை இழந்து வாடும் நடிகர் விஜய ராகவேந்திராவுக்கு, அந்த வலியை தாங்கும் சக்தியை இறைவன் கொடுக்க வேண்டும் என திரையுலகினர் மட்டுமின்றி அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆறுதல் கூறியும், பிரார்த்தனை செய்தும் வருகின்றனர்.

சமீபகாலமாக மாரடைப்புளால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. கன்னட லிட்டில் சூப்பர் ஸ்டார், அப்பு என்று அன்போடு அழைக்கப்பட்ட புனித் ராஜ்குமார் உட்பட பல பிரபலங்கள் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளனர். தற்போது ஸ்பந்தனாவும் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.