எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேர் கைது! இலங்கை கடற்படை அடாவடி!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகையை சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பதும் அவர்களது படகுகளை சேதப்படுத்துவதும் அன்றாட நிகழ்வாக மாறிப்போயுள்ளது. சில நேரங்களில் இலங்கை…

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகையை சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.

தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பதும் அவர்களது படகுகளை சேதப்படுத்துவதும் அன்றாட நிகழ்வாக மாறிப்போயுள்ளது. சில நேரங்களில் இலங்கை கடற்படையினர் துப்பாகிச்சூடு கூட நடத்தியிருக்கின்றனர்.

ஒவ்வொரு முறை இலங்கை கடற்படையினர் விசைப்படகுகளுடன் தமிழ்நாட்டு மீனவர்களை பிடிக்கும் போது மத்திய, மாநில அரசுகளின் அழுத்தம் காரணமாக நீண்ட போராட்டத்திற்கு பின் விடுதலைச் செய்யப்படுகின்றனர். ஆனால் அவர்களது படகுகள் உடனடியாக விடுவிக்கப்படுவதில்லை. இலங்கையிலேயே தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகள் கேட்பாரற்று கிடப்பதால் பெருத்த இழப்புக்கு தமிழ்நாட்டு மீனவர்கள் ஆளாகின்றனர்.

இந்த நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகையை சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும், மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட 10 மீனவர்களும் திரிகோணமலை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் அங்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மீனவர்கள் 10 பேர் சிறைப்பிடிக்கப்பட்ட தகவல் அறிந்த சக மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.