வரத்து அதிகரிப்பால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தக்காளி விலை குறைந்து வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சில்லறை விற்பனையில் தக்காளியின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய் வரை விற்பனையான நிலையில், கடந்த 31ஆம் தேதி வரலாறு காணாத அளவிற்கு புதிய உச்சமாக 210 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
இதனிடையே, தக்காளி விலை உயா்வை கட்டுப்படுத்தும் முயற்சியாக, தமிழ்நாடு அரசு , நியாயவிலைக் கடைகள் மற்றும் 67 பண்ணை பசுமைக் கடைகள் மூலமாக குறைவான விலைக்கு (கிலோ ரூ.60) தக்காளி விற்பனை செய்து வருகிறது.
கடந்த மூன்று நாட்களாக சென்னையில் தக்காளியின் விலை குறைய தொடங்கிய நிலையில், வரத்து அதிகரிப்பால் சென்னை கோயம்பேட்டில் நேற்று முன்தினம் ரூ.120க்கு விற்கப்பட்டு வந்த தக்காளி நேற்று ரூ. 100 ஆகக் குறைந்த நிலையில் இன்றும் முதல் ரகம் ஒரு கிலோ ரூ.100-க்கும் மேலும் தரத்திற்கேற்ப ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனையாகிறது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் ரூ.60க்கும் பழனி மார்க்கெட்டில் ரூ.40-க்கும் விற்கப்படுகிறது. வேலூரில் சில பகுதிகளில் ஒரு கிலோ ரூ.50க்கு விற்பனை ஆகிறது. மேலும் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் தக்காளி விலை படிப்படியாகக் குறைந்து வருகிறது.
சில்லறை விற்பனைக் கடைகளில் சந்தை விலையைவிட சற்று அதிகமாக விற்கப்படுகிறது. தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் அடுத்த வாரத்தில் தக்காளி விலை மேலும் குறையும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.







