‘காந்தாரா’ படம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில பேசி நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யார் அந்த நடிகர்… என்ன சார்ச்சை என்பது பற்றி பார்க்கலாம்…
கே.ஜி.எஃப்’ திரைப்படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவன தயாரிப்பில், கன்னட இயக்குநர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் காந்தாரா. தொடக்கத்தில் கன்னட மொழியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெற்ற வரவேற்பு காரணமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு திரையிடப்பட்டுள்ளது. 
வெறும் 17 கோடி ரூபாய் பொருள் செலவில் உருவான இந்த படம் இந்திய அளவில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரி குவித்துக் கொண்டிருக்கிறது. பிரபலங்கள் பலரும் படத்தை புகழ்ந்து வருகின்றனர்.
படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவை பாராட்டி உள்ளார். ‘தெரிந்ததை விட தெரியாதது தான் அதிகம் என்பதை சினிமாவில் ‘காந்தாரா’ படத்தை விட யாரும் தெளிவாக சொல்லியிருக்க முடியாது. கூஸ்பம்ப் (GOOSEBUMPS) தருணத்தை கொடுத்துள்ளீர்கள் என ரிஷப் ஷெட்டிக்கும் படக்குழுவிற்கும் பாராட்டுகளை தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
ஒருபுறம் பிரபலங்கள் புகழ்ந்து வரும் நிலையில் மறுபுறம் படத்திற்கு எதிரான விமர்சனங்களும் சர்சைகளும் எழுந்திருக்கின்றன. காந்தாரா படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகள் கேளராவில் உள்ள தைக்குடம் இசைக்குழுவினரின் இசை ஆல்பத்தில் இருந்து திருடப்பட்டு இருப்பதாக புகார் கூறப்பட்டு உள்ளது. படக்குழுவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று அறிவித்துள்ளது.
பூத கோலா என்ற நாட்டுப்புற நடனமாடும் தெய்வ நர்த்திகர்கள் படும் துயரத்தை இந்தப் படம் பதிவு செய்திருந்தது. படம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் ரிஷப் ஷெட்டி, பூத கோலா நடனம் இந்துக் கலாசாரத்தின் ஒரு பகுதி என்று கூறினார். அவரது பேச்சு பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பிரபல கன்னட நடிகர் சேத்தன் குமார், இந்து மதம் தோன்றுவதற்கு முன்பே ஆதிவாசிகள் பூத கோலா நடனக் கலையை பயன்படுத்தி வந்தார்கள் என்றும் ’காந்தாரா’ படம் மூலம் இந்து மதத்தை திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.
”பூத கோலா நடனக் கலையை ஆதிவாசிகள் வழி வழியாக செய்து வந்திருக்கிறார்கள் என்றும் இது ஹிந்து கலாசாரத்தில் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார் நடிகர் சேத்தன் குமார். ஹிந்து மதம் இந்தியாவில் தோன்றியதற்கு முன்பே ஆதிவாசிகள் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். ஹிந்தியையும் ஹிந்து மதத்தையும் திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் கூறினார் கன்னட நடிகர் சேத்தன் குமார். இதுபற்றி விடுதலை நாளிதழில் வெளியான செய்தியையும் அவர் டிவீட் செய்துள்ளார்.
https://twitter.com/ChetanAhimsa/status/1584870638187343873?s=20&t=xjLNS39gYj8UQ5INxR7NqQ
நடிகர் சேத்தன் குமாரின் கருத்தை கண்டித்து பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்து அமைப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். ஹிந்து மதஉணர்வுகளை நடிகர் சேத்தன் குமார் புண்படுத்தி விட்டார் என்று கூறி பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த ஷிவ குமார் என்பவர் அவருக்கு எதிராக ஷேஷாத்ரிபுரம் காவல் நிலையத்தில் அளித்தார். புகாரைத்தொடர்ந்து, மக்களை தவறாக வழிநடத்துதல் என்ற பிரிவின் கீழ் நடிகர் சேத்தன் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹிஜாப் விவகாரத்தில் நீதிபதி கிருஷ்ணா தீக்சித்க்கு எதிராக அவதூறு கருத்துகளை பதிவிட்டது தொடர்பாக நடிகர் சேத்தன் குமாரை போலீசார் ஏற்கனவே ஒரு முறை கைது செய்தனர். இந்நிலையில் நடிகர் சேத்தன் குமார் மீண்டும் சர்ச்சைக் கருத்து பதிவிட்ட காரணத்தினால் தற்போது கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







