கனியாமூர் மாணவி மரண வழக்கு: பள்ளி தாளாளர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

கனியாமூர் மாணவி மரண வழக்கில் ஜாமீன் மனுவை விசாரித்து முடிவெடுக்க , விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிடக் கோரி சின்ன சேலம் பள்ளி தளாளர் ரவிக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். கள்ளக்குறிச்சி…

கனியாமூர் மாணவி மரண வழக்கில் ஜாமீன் மனுவை விசாரித்து முடிவெடுக்க , விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிடக் கோரி சின்ன சேலம் பள்ளி தளாளர் ரவிக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு நியாயம் கேட்டு கடந்த மாதம் 17-ம் தேதி பள்ளியில் பெரும் வன்முறை நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி ரவிக்குமார் விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மாணவி உயிரிழப்பு தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அவரது ஜாமின் மனுவை விசாரிக்க கூடாது என சிபிசிஐடி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கின் விசாரணையை ஒத்திவைத்திருந்தார்.

இந்நிலையில் பள்ளியின் தாளாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி தனது ஜாமின் மனு மீதான விசாரணையை ஒத்திவைக்காமல் தனது மனுவை விசாரிக்க உத்தரவிட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி சதிஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மாணவி மரணம் தொடர்பாக தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு ஆகஸ்ட் 29ம் தேதி விசாரணைக்கு வருவதால், ஜாமின் மனுவை விசாரிக்க உத்தரவிடக்கூடாது என சிபிசிஐடி சார்பில் வாதிடப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மாணவி மரணம் தொடர்பாக ஆகஸ்ட் 29ம் தேதி காவல்துறை விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதை பொறுத்து, ரவிக்குமார் மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறி விசாரணையை ஆகஸ்ட் 30 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.