பாஜக பொறுப்பில் இருந்து கட்கரி, சிவ்ராஜ்சிங் சவுகான் நீக்கம்

பாஜகவின் தலைமை அமைப்பான நாடாளுமன்றக் குழுவில் இருந்து கட்சியின் மூத்த தலைவர்களான நிதின் கட்கரி, சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் நாடாளுமன்றக் குழு மற்றும் மத்திய தேர்தல் குழு ஆகியவை மாற்றி…

பாஜகவின் தலைமை அமைப்பான நாடாளுமன்றக் குழுவில் இருந்து கட்சியின் மூத்த தலைவர்களான நிதின் கட்கரி, சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

பாஜகவின் நாடாளுமன்றக் குழு மற்றும் மத்திய தேர்தல் குழு ஆகியவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய 11 பேர் கொண்ட நாடாளுமன்றக் குழுவில் இருந்து கட்சியின் முன்னாள் தலைவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி நீக்கப்பட்டுள்ளார். இதேபோல், கட்சியின் மூத்த தலைவரும் மத்தியப் பிரதேச முதலமைச்சருமான சிவ்ராஜ் சிங் சவுகானும் நீக்கப்பட்டுள்ளார்.

அதேநேரத்தில், பாஜக நாடாளுமன்றக் குழுவில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவும், அஸ்ஸாம் முன்னாள் முதலமைச்சர் சர்பானந்த சோனாவாலும் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், சுதா யாதவ், இக்பால் சிங் லால்புரா,சத்யநாராயண் ஜாடியா, கே. லக்ஷ்மண் ஆகியோரரும் நாடாளுமன்றக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம், 11 பேர் கொண்டதாக இருந்து வந்த நாடாளுமன்றக் குழு தற்போது 15 பேர் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர் ஜெ.பி. நட்டா தலைமையிலான இந்த குழுவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா ஆகியோர் உள்ளனர்.

இதேபோல், பாஜக தேர்தல் குழுவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஷானவாஸ் ஹூசைன், ஜூவல் ஓரம் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசன் இக்குழுவில் புதிதாக இடம் பெற்றுள்ளார். இதேபோல், ஓம் மாதூரும் இக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் 2024ல் நடைபெற உள்ள நிலையில், அதனை எதிர்கொள்வதற்கு ஏற்ப கட்சியில் முக்கிய மாற்றங்களை பாஜக மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.