முக்கியச் செய்திகள் கதைகளின் கதை

பட்டியலினத்துக்கு மட்டும் பாடுபட்ட தலைவரா டாக்டர் திருமாவளவன்

தலித் பேந்தர்ஸ் ஆஃப் இந்தியா இரா.திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனாக மாறியது எப்படி? என்பதனை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

“ஊர்ல என்ன அநாதையா போட்டுட்டு, நீ ஊர சுத்திக்கிட்டுருக்கிற. திடீர்னு எனக்கு நெஞ்ச அடச்சுகிட்டு வலி வந்துச்சு. நானே முயற்சி பண்ணி நடுராத்திரில ஆஸ்பத்திரிக்குப் போனேன். வலி வந்தப்போ நீ கூட இல்ல. உசுரு போவும்போது நீ கூட இருந்தா போதும்” என்று மகனை நினைத்து உருகினார் தாய். “அம்மா இப்படி சொன்னபோது அடிவயிறு கலங்கியது” என கண்கலங்கினார் அந்த மகன். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக இரவு பகலாக உழைக்கும் மகனுக்கும், தல்லாத வயதிலும் தனது அருகிலேயே இல்லாமல் கொள்கைகாகவும், ஊருக்காகவும் போராடி அலைகிறானே என மகனை நினைத்து ஏங்கும் தாய்க்கும், இடையேயான பாசப்போராட்டம் தான் இது. அந்த வீர மகன் வேறுயாரும் அல்ல, மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எழுச்சித்தமிழர் என அனைவராலும் போற்றப்படும் தொல்.திருமாவளவன் தான்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மக்கள் உரிமை போராட்டங்கள், மக்களவை உரைகள், கட்சி அலுவலகப் பணிகள் என பொது வேலைகளிலேயே திருமாவளவன் சுற்றி சுழன்றுக்கொண்டிருக்கும் நேரத்திலும், தல்லாத வயதில், உடல் நலக்குறைவால் அவதிபட்டு வந்த தனது தாயை சந்திக்க சென்றபோது, இருவருக்கும் இடையே நடந்த பாச உரையாடல் தான் இது. இதனை தனது ட்விட்டர் பக்கத்திலேயே திருமாவளவன் பதிவிட்டிருந்தார். கொரோனா தொற்றுக்கு அக்காவை பறிகொடுத்துவிட்டு தவித்து வந்த திருமாவளவன் டைஃபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தன் தாயின் காலடியில் அமர்ந்திருந்த படம் ஒன்று அப்போது வைரலானது. எவ்வளவு சிரமப்பட்டும், ஒரு மகனாக தாயின் அருகிலிருந்து பார்த்துக்கொள்ளும் கடமையை செய்ய முடியாமல் போவதற்கு காரணம், நீதி பெற்றுத்தர கேட்டு அவரது வீட்டுக் கதவை தட்டும் கைகள் தான். “ஐயா, என் புள்ளைய வெட்டிட்டாங்க. ஆணவ கொலை செஞ்சிட்டாங்க. எங்கள பொது குழாயல் தண்ணி புடிக்க விடல. பிணத்தை சுடுகாட்டில் எரிக்க அனுமதிக்கல” என இரவு பகல் பாராமல் நீதி கேட்டு நாடி வருபவர்கள் ஏராளம். நடுராத்திரி நேரத்தில் கதவை தட்டி நீதி கேட்டு நின்றாலும், அந்த நேரத்திலும் சட்டையை மாட்டிக்கொண்டு, அவர்களுக்காக களத்தில் போராட வீட்டைவிட்டு செல்லும் திருமாவளவனின் கால்கள், சமயத்தில் வீடு திரும்பவே நாட்கள் ஆகின்றன.

ஆயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டு, சாதியின் பெயரால் ஒடுக்கப்படும் மக்களின் தலைநிமிர்வே, தனது ஒரே லட்சியம் என அரசியல் பயணத்தை துவக்கி, இன்று அனைத்து தரப்பினருக்குமான உரிமைகளை பெற போராடும், தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உயர்ந்து நிற்கும் தலைவராக, தமிழ்நாடெங்கும் வலம் ஒருவர் உண்டு என்றால் அது தொல்.திருமாவளவன் தான். ஆனால் இன்றும், திருமாவளவனை தலித் சமூகத்திற்கான தலைவர் என்று மட்டுமே நிறுவ பல முயற்சிகள் பலரால் எடுக்கப்பட்டு வருகின்றன. உண்மையில் திருமாவளவன் தலித் சமூக மக்களுக்கு மட்டுமான தலைவரா? தமிழ்நாட்டில் மாற்று அரசியலுக்கான முகமாக திருமாவளவன் முன்னிறுத்தப்படுவது ஏன்? தலித் பேந்தர்ஸ் ஆஃப் இந்தியா இரா.திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனாக மாறியது எப்படி? போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இன்றைய தொகுப்பு.

1962 ஆகஸ்ட் 17-ஆம் தேதி, அன்றைய திருச்சி மாவட்டத்தின் அங்கனூர் கிராமத்தில், தந்தை இராமசாமி, தாயார் பெரியம்மாளுக்கு மகனாய் பிறந்தார் திருமாவளவன். அவரது குடும்பம், மிகவும் ஏழ்மையான குடும்பம். தந்தை இராமசாமி காட்டில் விறகு வெட்டும் தொழில் செய்து வந்தார். திருமாவளவன் உயர்நிலைப் பள்ளி கூட இல்லாத ஒரு சூழலில் தான் வளர்ந்தார். அதோடு, இந்திய மண்ணின் தீராத, தீர்க்கப்படவேண்டிய பிரச்னையான சாதியக் கொடுமைகள் அவரை துரத்திக் கொண்டிருந்தன. பள்ளிப்படிப்பை சொந்த ஊரில் முடித்த திருமாவளவன், கடலூர் மாவட்டம் விருதாச்சலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் பியூசி படிப்பை முடித்தார். பின், உயர்கல்விக்காக சென்னையை நோக்கி நகர்ந்தார். திருமாவளவனின் அரசியலுக்கு அகரம் தீட்டியது சென்னை மாநகரம் தான். மாணவப் பருவத்திலேயே, அரசியலில் காலடி எடுத்து வைக்கத் தொடங்கினார் திருமாவளவன். வைகோ, துரைமுருகன், காளிமுத்து என பல அரசியல் ஆளுமைகளை உருவாக்கிய திமுக மாணவரணி, திருமாவளவனையும் உருவாக்கியது. அன்றைய திமுக தலைவர் கருணாநிதியின் எழுத்தாலும் பேச்சாலும் ஈர்க்கப்பட்ட திருமாவளவன், திமுக மாணவரணி நடத்திய அனைத்துக் கூட்டங்களிலும் கலந்துக் கொள்ளத் தொடங்கினார். திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் திருமாவளவனை தங்களில் ஒருவராக பார்ப்பதற்கும், சாதி ஒழிப்பில் திராவிட இயக்கம் தங்களுடைய நெருக்கமான கூட்டாளி என திருமாவளவன் கூறுவதற்கும் இதுவே முக்கியக் காரணம். மாணவப் பருவத்தில், கல்வியோடு சேர்ந்த புத்தக வாசிப்பு பழக்கமே தன்னை அதிகமாக வழிநடத்தியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் திருமாவளவன்.

அண்மைச் செய்தி: ‘‘பரந்தூர் விமான நிலையம்; மக்களின் எதிர்ப்பு உணர்வு நியாயமானது’ – காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை’

1983 ஜூலைக் கலவரங்களுக்குப் பின்னர், ஈழத்தமிழர் பிரச்னை உச்சத்தை அடைந்தது. 1983-ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் மாணவர்கள் நடத்திய போராட்டங்களை திருமாவளவன் தான் ஒருங்கிணைத்தார். இதுவே, திருமாவளவனின் முதல் அரசியல் நடவடிக்கையாக கருதப்படுகிறது. ஒடுக்கப்பட்ட மற்றும் மீனவ சமூக மாணவர்களை உள்ளடக்கிய இளைஞர்கள் நல அமைப்பு உருவாக்கப்பட்ட போது, அதன் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் திருமாவளவன். அதே போல் திராவிடர் கழகம் நடத்திய பல போராட்டங்களிலும் திருமாவளவன் கலந்து கொண்டு முக்கிய பங்காற்றினார். 1986ல் இலங்கைக்குச் சென்ற திருமாவளவன், இலங்கை தமிழ் கல்லூரி மாணவர்களோடு இணைந்து போராட்டத்தில் கலந்து கொண்டார். இந்தியா திரும்பிய பின்னரும் தொடர்ந்து பல மாணவப் போராட்டங்களில் கலந்து கொண்டு தனது பங்களிப்பை அளித்தார் திருமாவளவன். சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்ற அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் குற்றவியலில் முதுகலைப் படிப்பையும் முடித்தார். அதன் பின்னர் 1989 தமிழ்நாடு சட்டமன்றத்துக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே போராட்டங்கள் வாயிலாக அரசியல் ஆர்வமும், அரசியல் தலைவர்கள் மத்தியில் கவனமும் பெற்றிருந்த திருமாவளவன், தேர்தலிலும் போட்டியிட விரும்பினார். ஆனால், அப்போது அவருக்கு அந்த வாய்ப்பு கைகூடாமல் போனது. அரசியல் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் படிப்பிலும் அதிக கவனம் செலுத்திய திருமாவளவன், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்து முடித்தார். கல்லூரிப் படிப்பை முடித்ததும் தமிழ்நாடு அரசின் தடய அறிவியல் துறை பணியில் சேர்ந்தார் திருமாவளவன். அறிவியல் உதவியாளராக சென்னை, கோவை, மதுரை எனப் பல இடங்களில் பணியாற்றியபோதும், அவருக்கு அரசியல் ஆர்வம் குறையமலே தான் இருந்தது. அப்போது, அவரது அரசியல் பாதையை மாற்றியது மதுரை தான்.

1988-ல் மதுரை மாவட்டத்தில் திருமாவளவன் பணியாற்றிய போது, அங்கு நடந்த சாதியக் கலவரங்கள் திருமாவளவனை மிகக் கடுமையாக பாதித்தது. இளம் வயதில் இருந்தே தன்னை துரத்திய சாதியக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற எண்ணம் திருமாவளவனுக்கு வலுவாக ஏற்பட்டது. 1982-ஆம் ஆண்டு அம்பேத்கரின் மனைவி சவீதாவால் தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்த தலித் பேந்தர்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பின் தமிழ் அமைப்பாளர் மலைச்சாமியுடன், திருமாவளவனுக்கு அறிமுகம் ஏற்பட்டது. அந்த அறிமுகம் தான், காலப்போக்கில் தலித் பேந்தர்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பில் திருமாவளவனை இணைத்தது. 1989 செப்டம்பர் 14 அன்று மலைச்சாமி மரணமடைந்தார். அதனையடுத்து 1990 ஜனவரியில் அந்த அமைப்பின் மாநில அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் திருமாவளவன். பின்னர், அமைப்பின் பெயரை இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் எனவும் மாற்றினார். கோவையில் பணிபுரிந்த போது மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த பலரோடு திருமாவளவனுக்கு தொடர்பு ஏற்பட்டது. 1990-ஆம் ஆண்டு அவரது அமைப்பிற்கான கொடியும் அறிமுகம் செய்யப்பட்டது. 1991-ஆம் ஆண்டு அமைப்பின் பெயர் விடுதலை சிறுத்தைகள் என்று மாற்றப்பட்டது. அந்த நீலமும் சிவப்பும் நட்சத்திரமும் கலந்த கொடியே, இன்னும் விடுதலை சிறுத்தைகளின் கொடியாக இருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான ஈர்ப்பு காரணமாக தலித் பேந்தர்ஸ் அமைப்பின் பெயரை விடுதலை சிறுத்தைகள் என திருமாவளவன் மாற்றியதாக கூறப்படுகிறது. அதிலிருந்து விடுதலை சிறுத்தைகள் போராட்டக்களத்திலும், அரசியல் களத்திலும் வேகமெடுத்து பாயத் தொடங்கின.

தனது மாணவப் பருவத்திலேயே விடுதலைப் புலிகள் என்ற கையெழுத்து பத்திரிக்கையை திருமாவளவன் நடத்தியது குறிப்பிடத்தக்கது. தொடக்க காலத்தில் திருமாவளவனின் அரசியல் நடவடிக்கைகள் வேகமானதாகவும், சாதிய ஆதிக்கத்தை எதிர்த்து திருமாவளவன் முன் வைத்த முழக்கங்கள் வலிமையானதாகவும் இருந்தது. அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடி என்ற திருமாவளவனின் முழக்கங்கள் தென் மாவட்டங்களில் பலத்த அதிர்வுகளை எழுப்பியது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான பல அடக்குமுறைகளுக்கு எதிராக திருமாவளவனின் குரல் வலிமையாக ஒலித்தது. அதற்காக பல போராட்டங்களையும் திருமாவளவன் முன்னெடுத்தார். அதில், தமிழ் தேசிய கொள்கைகளும் அடக்கம். மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியினர் தமிழர்களை தாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தியது. எந்த ஒரு சாதிய ஆதிக்கத்துக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் போராட்டமும், முழக்கங்களும் எப்போதும் எழுந்துக்கொண்டே இருந்தன. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய போராட்டமாக அமைந்தது பஞ்சமி நில மீட்பு போராட்டம் தான். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை ஆதிக்க சாதியினர் முறைகேடாக அபகரித்து வந்ததை தொடர்ந்து, வட மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி செயல்படத் தொடங்கியது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் ஆதிக்க சமூகத்தினரால் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் வீடுகள் எரிக்கப்பட்டதைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர் போராட்டம் நடத்தியது. பஞ்சமி நில மீட்பு, கோயில் நிலம் சார்ந்த பல போராட்டங்களை முன்னெடுத்ததன் காரணமாக வட மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலுவாக காலூன்றத் தொடங்கியது.

1990-களின் மத்தியில் திட்டக்குடி பகுதியில் வன்னிய சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் கொடியேற்ற முயன்றதாக கூறி தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த மோதலில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பலியானார். இதனையடுத்து வட மாவட்டங்கள் முழுவதும் பரவலாக வன்னிய சமூக மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கும் மோதல்கள் நடைபெற்றன. அதன் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது தவறான பிம்பம் பொது புத்தியில் கட்டமைக்கப்பட்டது. 1994-ஆம் ஆண்டு இதனைக் கண்டித்து மகாபலிபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தின்போது, காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இதனைக் கண்டித்து ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் சென்னையில் பேரணி நடைபெற்றது. 1997-ல் மாவட்டம் மேலவளவு ஊராட்சி தலைவர் முருகேசன் கொலை செய்யப்பட்டது திருமாவளவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தாழ்த்தப்பட்ட சமூக மக்களை தேர்தல் வேலைகளுக்கு மட்டும் அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டினார் திருமாவளவன். வாக்கரசியலையும் புறக்கணிக்க வேண்டும் என மக்களுக்கு அழைப்பு விடுத்த திருமாவளவன், தேர்தலின் போது வாக்குச் சீட்டுகளுக்குப் பதிலாக தாங்கள் தயார் செய்த சீட்டுக்களை வாக்குப் பெட்டியில் போட்டனர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.

1997-ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்தின விழாவைக் கொண்டாட நாடே தயாராக இருந்தபோது, இந்தியாவின் விடுதலை, தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கான விடுதலையை தரவில்லை எனக் கூறி, சுதந்திர கொடும்பாவி எரித்து போராட்டம் நடத்தியது விடுதலை சிறுத்தைகள் கட்சி. ஆனால், பின்னர் தேர்தல் அரசியல் குறித்த திருமாவளவனின் பார்வைகள் மாறத் தொடங்கின. தேர்தல் அரசியலைப் புறக்கணிப்பதால் எந்தப் பலனும் ஏற்படாது என்றும், ஆட்சியதிகாரமே மக்களை வாழ வைக்க முடியும் என்ற கருத்துக்கு வந்தார் திருமாவளவன். 1999-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள் இல்லாத அணியில் போட்டியிட விடுதலை சிறுத்தைகள் கட்சி விரும்பியதால், அப்போது மூன்றாவது அணியை அமைத்த தமிழ் மாநில காங்கிரசின் மூப்பனாருடன் இணைந்து போட்டியிட்டது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் இரண்டரை லட்சம் வாக்குகளைப் பெற்று அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். அதன்பின், 2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்தபோது, மங்களூர் தொகுதியிலேயே திருமாவளவனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக வந்த தகவல்களின் அடிப்படையில் மங்களூர் தொகுதி அவருக்கு ஒதுக்கப்பட்டது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட திருமாவளவன் தேர்தலில் வெற்றியும் பெற்றார்.

ஆனால், திமுக ஆட்சியை இழந்தது. ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்றார். சட்டமன்ற உறுப்பினரான பின்னர், தொடர்ந்து சாதியக் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார் திருமாவளவன். சிதம்பரம் கோயில் முன் நடந்த போராட்டம், கண்டதேவி தேரோட்டத்திற்கான போராட்டம் போன்றவற்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சி முக்கிய பங்காற்றியது. 2002ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொள்ள சென்ற திருமாவளவன் தாக்கப்பட்டாளும், போராட்டத்தை கைவிடவில்லை. 2002 நவம்பர் 27 அன்று தமிழறிஞர்களை ஒன்றுதிறட்டிய திருமாவளவன், புழக்கத்தில் இருக்கும் பிறமொழிச் சொற்களுக்கு சரியான தமிழ்ப்பெயர்களை உருவாக்குமாறு கேட்டார். மேலும் சாதி மத அடையாளங்கள் அல்லாத தமிழ்ப்பெயர்களை எல்லாரும் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரினார். முதற்கட்டமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 5000 தொண்டர்கள் தங்கள் பெயரை மாற்றிக் கொண்டனர். திருமாவளவனின் தந்தை இராமசாமி தனது பெயரை தொல்காப்பியன் என மாற்றிக் கொண்டார். இரா.திருமாவளவன் அன்று முதல் தொல். திருமாவளவனாக மாறினார்.

2004-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் கூட்டணி கட்சியினருடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், 2004-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், மக்கள் தமிழ் தேசம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டது. மீண்டும் சிதம்பரம் தொகுதியில் களம் கண்ட திருமாவளவன் கணிசமான வாக்குகளை பெற்றதோடு, அதிமுக கூட்டணி வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் பிடித்தார். 2004-ல், திருமாவளவன் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாமக நிறுவனர் ராமதாஸ், திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியது, இருவருக்குமான நல்லிணக்கத்தை காட்டியது.

2005-ல் மதுரையில் நான்காம் வட்டமேசை மாநாடு என்ற பெயரில் திருமாவளவனால் நடத்தப்பட்ட மாநாடு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்குரிமை மற்றும் தனித் தொகுதி ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தது. 1932-ஆம் ஆண்டு லண்டனில் நடந்த வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் எழுப்பிய கோரிக்கைகளை மீட்டுருவாக்கம் செய்தார் திருமாவளவன். 2006-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் செல்வப்பெருந்தகை, ரவிக்குமார் ஆகியோர் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தலுக்குப் பின் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தில் இணைந்து தொடர்ந்து செயல்பட்டார். 2006-ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது அதிமுக கூட்டணிய முறித்துக் கொண்டு, திமுக கூட்டணியில் இணைந்தது விடுதலை சிறுத்தைகள் கட்சி. 2007 அக்டோபர் மாதம், சென்னையில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுக்குழுவில், ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கான அமைப்பு என்பதிலிருந்து, அனைத்து சமூக மக்களுக்கான கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி வளர்ச்சியடைந்தது. தாழ்த்தப்பட்ட சமூக மக்களும் சிறுபான்மையின மக்களும் இணைந்து செயல்பட வேண்டுமென்ற கருத்தை முன்வைத்தார் திருமாவளவன். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் பல இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இணைந்தனர்.

2008-ல் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில் தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2009 ஜனவரியில் ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்காக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார் திருமாவளவன். 2009-ல் நடந்த தேர்தலில், திமுக கூட்டணியில் இணைந்து, சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தேர்வானார். நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், இலங்கைத் தமிழர் பிரச்சனைகளுக்காகவும் ஒலிக்கும் அழுத்தமான குரலாக திருமாவளவன் குரல் இருந்தது. தேர்தலுக்கு பின்னும், தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் அமைப்பை பலப்படுத்தினார் திருமாவளவன். 2011-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிட்ட 10 தொகுதிகளில், தாழ்த்தப்பட்டோர் அல்லாத சமூகத்தைச் சேர்ந்தவர்களும் போட்டியிட்டனர். தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கான தலைவராக அறியப்பட்ட திருமாவளவன் எல்லா சமூக மக்களையும் உள்ளடக்கிய இன்குளூஸிவ் பாலிடிக்ஸ் செய்ய ஆரம்பித்தார். 2014-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக அணியில் போட்டியிட்டது விடுதலை சிறுத்தைகள் கட்சி. தேர்தலில் தோல்வியடைந்தாலும், அவர் போராட்ட அரசியலில் இருந்து தோய்வுபெறவில்லை.

2016-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுகவிற்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணி உருவாக்கப்பட்டதில் திருமாவளவனின் பங்கு முக்கியமானது. காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன், வெறும் 87 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார். திருமாவளவன் தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் இடம் பெறாதது துரதிருஷ்டவசமானது என கருத்து தெரிவித்தனர் அரசியல் விமர்சகர்கள். ஆனால், 2019ல் தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கே சென்றார் தொல்.திருமாவளவன். 2019ல் திமுகவின் மதசார்பற்ற கூட்டணியில் இடம்பெற்று, தனிச்சின்னமான பானை சின்னத்தில் போட்டியிட்ட திருமாவளவன், பெரும் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினாராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திருமாவளவன் போட்டியிட்ட தொகுதியில், நள்ளிரரவு வரை வாக்கு எண்ணிக்கையில் இழுபறி ஏற்பட்டு பின்னர் திருமாவளவனே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அன்று முதல், தற்போது வரை மக்களவையில் தமிழ்நாட்டு மக்களின் குரலாகவே ஒலித்துக்கொண்டிருக்கிறார் திருமாவளவன். மத்திய அரசு அறிமுகப்படுத்திய CAA, வேளான் சட்டங்கள், தேசிய கல்விக் கொள்கை போன்றவற்றிக்கு மக்களவையிலும், போராட்டக்களத்திலும் தொடர்ந்து தனது எதிர்ப்பை தெரிவித்து வந்தார். 17வது மக்களவை தொடங்கி 2022 பட்ஜெட் கூட்டத்தொடர் வரையான கணக்கெடுப்பில், தமிழ்நாட்டை பொறுத்தவைரை, நாடாளுமன்றத்தில் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் தான், 6 தனி நபர் மசோதாக்களை அறிமுகம் செய்து, தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை திருமாவளவன் முன் வைத்திருந்தார். தாழ்த்தப்பட்டோருக்கான தலைவர் என்று அடையாளப்படுத்தப்பட்ட திருமாவளவன், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு குறித்து முதலில் குரல் எழுப்பியது, அவர் மீதான கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை உடைத்தது. அம்பேத்கரின் பிறந்தநாளை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். அதன்பின்னர், அம்பேத்கர் பிறந்த நாள், தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அம்பேத்தர் சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவிக்க சென்றபோது நடந்த பிரச்னை குறித்து பேசிய திருமாவளவன், ”அம்பேத்கரின் சமத்துவக் கொள்கைக்கு நேர் எதிரான சனாதன கொள்கையைக் கொண்ட பாஜகவினருக்கு, அம்பேத்கரின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க அருகதை இல்லை” என தெரிவித்தார்.

நீட் விலக்கு மசோதாவை இரண்டாவது முறையாக, தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு அனுப்பியும், அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை என்பதால், தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தெரிவித்தார். சுதந்திர தினத்தன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர்கள் கொண்டு தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டிருப்பது, திருமாவளவனின் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான போராட்டத்திற்கு கிடைத்த மற்றொரு வெற்றி என்றே கூறப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக திருமா பயிலகம் பெயரில், அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கி வரும் திருமாவளவன், சாதி – மதம் உள்ளிட்ட தற்காலிக அடையாளங்களில் மாணவர்கள் சிக்கிக்கொள்ளாமல், அதிகார வலிமை பெற வேண்டும் என அக்கறையுடன் வலியுறுத்துகிறார். அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு இசை அமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதிய புத்தகம் வெளியாகி சர்ச்சை உருவானபோது, ”அம்பேத்கரை எந்த வடிவிலும் பிரதமர் மோடியுடன் ஒப்பிட முடியாது என்ற திருமாவளவன், சங்பரிவார் அமைப்புகளின் கொள்கைகளுக்கு நேர் எதிரானவர் அம்பேத்கர்” என்றும் கருத்து தெரிவித்தார்.

தனது மகன் திருமணம் கூட செய்துகொள்ளாமல் மக்களுக்காக உழைக்கின்றார் என தாயார் வருத்தம் தெரிவிக்கும் அளவிற்கு, அரசியலில் காலடி எடுத்து வைத்த நாள் முதலே மக்களுக்கான பணியே முதல் பணி என தனது வாழ்நாளையே ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் உட்பட அனைத்து மக்களுக்காகவும் அற்பணித்து வருகிறார் தொல்.திருமாவளவன். ”அரசியல் களத்தில் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் ஒரு அரசியல்வாதியைக் காட்டிலும், சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் போராடும் ஒரு சமூக சீர்திருத்தவாதியே துணிச்சல்மிக்கவர்” என்றார் அம்பேத்கர். அம்பேத்கரின் இந்த வார்த்தைகளுக்கு சரியாக பொருந்துகிறார், சமூக சீர்திருத்த மருத்துவர் டாக்டர் தொல்.திருமாவளவன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மியான்மரில் சிக்கிய தமிழர்களை மீட்க மநீம வலியுறுத்தல்

Web Editor

கோவிஷீல்டு 2-ம் தவணை காலம் நீட்டிப்பு!

Jeba Arul Robinson

‘அக்னிபாத்’ அறப்போராட்டத்திற்கு முழு ஆதரவு – சீமான்

Halley Karthik