காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள ஏரிகளில் மீன்களை பிடிப்பதற்காக மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுவதாக விவசாயிகள் உத்திரமேரூரில்
நடைபெற்ற ஜமாபந்தியில் புகார் மனுக்களை அளித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் அதிகளவில் ஏரிகள் உள்ளன.இங்குள்ள ஏரிகளை நம்பி ஆயிரக்கணக்கான ஹெக்டேக்டர் விவசாய நிலங்கள் உள்ளன.தற்போது விவசாயிகள் அறுவடை காலம் முடிந்து அடுத்த பருவம் விவசாயம் செய்வதற்காக நாற்றங்கால் அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிகளில் உள்ள மீன்களை பிடிப்பதற்காக அரசு சார்பில் ஏலம் விடப்பட்டிருந்தது.ஏலம் எடுத்த குத்தகைதாரர்கள் மீன்களை விரைவாக பிடிப்பதற்காக இரவோடு, இரவாக சட்டத்திற்கு புறம்பான வகையில் மின் மோட்டார்கள் மூலம் ஏரிகளில் உள்ள தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.இந்நிலையில் உத்திரமேரூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்று வருகின்றது.இதனை சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் கோட்டாச்சியர் கனிமொழி கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அப்போது மருத்துவன்பாடியை சேர்ந்த தனபால் என்ற விவசாயி ஏரிகளில் உள்ள தண்ணீரை மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றுவதால் விவசாயம் அடியோடு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும், இல்லையெனில் விவசாயிகளை ஒன்றுதிரட்டி சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.இதனை தொடர்ந்து மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.
-வேந்தன்







