விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த நபர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி விட்டு 18ஆடுகளை திருடிச் சென்ற கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர்.இவர் செம்மறி ஆடுகளை வளர்க்கும் தொழில் செய்து வருகிறார்.இவரது வீட்டில் ஆடு மேய்க்கும் வேலையில் மாரிச்சாமி என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த பத்தாம் தேதி மாரிச்சாமி லட்சுமிபுரம் பகுதியில் கிடை அமைத்து ஆடுகளை வளர்த்து வந்தார்.அப்போது அப்பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் தனது கூட்டாளிகள் 38 பேருடன் வந்து மாரிச்சாமி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு 18 ஆடுகளை திருடிச் சென்றுவிட்டார் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து காயம் அடைந்த மாரிச்சாமி மற்றும் ஆட்டின் உரிமையாளர் சந்திரசேகர் இருவரும் இருக்கன்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.ஆனால் இவர்கள் புகார் மீது காவல்துறை தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் 18 ஆடுகளை திருடிச்சென்ற நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச்செயலாளர் சத்யம் சரவணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
-வேந்தன்







