முக்கியச் செய்திகள் தமிழகம்

இருளர் சமூக மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய ஆட்சியர் ஆர்த்தி

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற ஒரே மாதத்தில், இருளர் சமூக மக்கள் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி கவனம் ஈர்த்த ஆட்சியர் ஆர்த்தி.

உத்திரமேரூர் அருகேயுள்ள நரியம்புதூர் கிராமத்தில் இருளர் சமூகத்தை சேர்ந்த 9 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தங்களுக்கு பட்டா வழங்க கோரி, மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்துவந்த நிலையில், தங்களுக்கு விடிவுகாலம் பிறக்காதா என்ற ஏக்கத்துடன் அம்மக்கள் காத்திருந்தனர்.

இந்த நிலையில் தான், அம்மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறார் ஆட்சியராக பொறுப்பேற்ற ஆர்த்தி. கடந்த மாதம் 14ம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக ஆர்த்தி பொறுப்பேற்றதை அடுத்து, இருளர் சமூக மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் நடவடிக்கை வேகமெடுத்துள்ளது.

அரசின் பல்வேறு ஆய்வுக்கு பிறகு அம்மக்களின் கரங்களில் பட்டாவை ஒப்படைத்தார் ஆட்சியர் ஆர்த்தி. பட்டாவை கையில் பெற்ற ஒவ்வொருவரும் ஆனந்த கண்ணீர் வடித்தனர். அந்த மகிழ்வை மேலும் பெரிதாக்கும் வகையில், 2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கட்டும் திட்டத்தையும் தொடங்கி வைத்திருக்கிறார் ஆட்சியர் ஆர்த்தி.

மாவட்டத்தில் வசிக்கும் இருளர் சமூக மக்களின் எண்ணிக்கை எவ்வளவு? வாழ்வாதாரம், குடியிருப்பு, வேலைவாய்ப்பு குறித்தெல்லாம் ஆய்வு நடத்தி, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்த ஆட்சியர், கால்நடை வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு கொட்டகை உள்ளிட்டவை அமைக்கவும், பிள்ளைகள் கல்விபெறவும் வேண்டிய உதவிகள் செய்துத் தரப்பட உள்ளதாக கூறியுள்ளார். பருவமழைக்கு முன்பாக வீடு கட்டும் பணிகளை முடிப்பதே தற்போதைய நோக்கமாக உள்ளதாக திட்ட இயக்குனர் ஜெயசுதா கூறியுள்ளார். இந்நிகழ்வில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், வேல்முருகன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

கொரோனா ஊரடங்கு, வேலைவாய்ப்பின்மை என பல்வேறு காரணிகளால் பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு, தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் என பலரும் உதவி வந்த நிலையில், தங்களுக்கான இருப்பிடம் உறுதி செய்யப்பட்டது, அம்மக்களின் மனங்களில் ஆட்சியர் ஆர்த்தியை ஒரு வழிகாட்டியாகவே அமர வைத்திருக்கிறது.

Advertisement:

Related posts

பட்டாசு தீவிபத்தில் உயிரிழந்த தாத்தா, 2 பேரன்கள் !

எல்.ரேணுகாதேவி

மதுரையில் தற்காலிக கட்டிடத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி?

Halley karthi

சாத்தான்குளம் கொலை வழக்கில் நியாயம் கிடைக்கும்: எம்.பி. கனிமொழி

Vandhana