காஞ்சிபுரம் அனாதீன நிலம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு: உயர் நீதிமன்றம்

காஞ்சிபுரத்தில் 134 கோடி ரூபாய் மதிப்பிலான 102 ஏக்கர் அனாதீன நிலத்தை, சட்டவிரோதமாக தனிநபர்களுக்கு ஒதுக்கியது தொடர்பான வழக்கின் விசாரணையின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு…

காஞ்சிபுரத்தில் 134 கோடி ரூபாய் மதிப்பிலான 102 ஏக்கர் அனாதீன நிலத்தை, சட்டவிரோதமாக தனிநபர்களுக்கு ஒதுக்கியது தொடர்பான வழக்கின் விசாரணையின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூர் கிராமத்தில், 134 கோடி ரூபாய் மதிப்பிலான 102 ஏக்கர் அனாதீன நிலம், 66 தனி நபர்களுக்கு சட்ட விரோதமாக ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், இதுசம்பந்தமாக காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு, வழக்குப்பதிவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அந்த வழக்கில் எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை எனவும், இந்த மெகா ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படியும், இந்த வழக்கு தொடர்பான புலன் விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.