மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி இல்லாமல் இனி அரசு கட்டடங்கள் கட்டக் கூடாது: உயர் நீதிமன்றம்

  மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையிலான கழிப்பறை வசதிகளும் அலுவலகத்தை பயன்படுத்த ஏதுவான வசதிகளும் இல்லாமல் எந்த அரசு கட்டடங்களும் இனி கட்டக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

 

மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையிலான கழிப்பறை வசதிகளும் அலுவலகத்தை பயன்படுத்த ஏதுவான வசதிகளும் இல்லாமல் எந்த அரசு கட்டடங்களும் இனி கட்டக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு கட்டடங்கள், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் அமைக்க உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 32 மாவட்டங்களில் அரசு கட்டடங்களில் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், மாநிலம் முழுவதும் உள்ள அரசு கட்டடங்கள், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் உள்ளதா என்பது குறித்த விவரங்கள் அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டனர்.

அனைத்து அரசு கட்டிடங்களும், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இரண்டு மாதங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் வசதிகள் இல்லாமல் எந்த அரசு கட்டடங்களும் இனி வருங்காலங்களில் கட்டக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், இதுசம்பந்தமான சட்ட விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என பொதுப்பணித்துறைக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என கூறி, விசாரணையை செப்டம்பர் 1-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.