ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். 46 வயதே ஆன திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27ல் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா உள்ளிட்ட 80 பேர் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இருப்பினும் ஈரோடு இடைத் தேர்தலில் 4 கட்சிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவுகிறது.
இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக வின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக வின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீமான் மற்றும் தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கருங்கல்பாளையத்தில் தீவிர பிரச்சாரம் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து பிரச்சாரத்தில் பேசிய அவர் கூறியதாவது..
” நான் அரசியலுக்கு வந்தது லாபத்திற்காக அல்ல. இந்த பிரச்சாரத்திற்கு வந்ததும் அதற்காக அல்ல. விஸ்வரூபம் வந்த போது என்னை தடுத்து சிரிக்க வைத்தார் ஒரு அம்மையார். அப்போது கலைஞர் இது குறித்து பயப்படாதே ஏதாவது உதவி வேண்டும் என்றால் கேள் என்று என்னிடம் கேட்டார். இது என்னுடைய பிரச்சனை பார்த்து கொள்கிறேன் என சொல்லி விட்டேன்.
இந்த பிரச்சாரத்திற்கு வந்ததற்கான காரணம் நம்முடைய நாடு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகத்தான். விமர்சனத்தை பிறகு பார்த்து கொள்வோம்.
தற்போழுது மய்யம் என்பது நடுநிலையோடு இருப்பதல்ல. கொள்கை முரண்பாடுகளை தள்ளிவைத்துவிட்டு மக்களின் நலனுக்காக எது நியாயமோ அதற்காக ஒன்றாக இணைவதுதான் மய்யம். நான் யோசித்து பேசுகிறவன். பல விமர்சனங்களை கேட்டுவிட்டுத்தான் இது சரியான பாதை என்று இந்த பிரச்சாரத்திற்கு வந்திருக்கிறேன்.
ஆங்கிலேயர்கள் செய்த அதே பிரிவினை விளையாட்டை மீண்டும் செய்ய முடியாது. ஏனெனில் அதற்கான ஒத்திகையை முடித்து அவர்களை அனுப்பி வைத்து விட்டோம். கிழக்கு இந்தியா கம்பெனி முடிந்து போய் தற்போது வட இந்தியா கம்பெனி உருவாகியுள்ளது.
நமது நாடு மதச்சார்பற்ற நாடாக இருக்க முன்னோடி பணிகளை செய்த காங்கிரசு கட்சியை சார்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.” என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
– யாழன்







