பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் மற்றும் பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக செவிலியர்கள் மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் உள்ள சேராப்பட்டு ஆரம்ப
சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் மற்றும் பச்சிளம்
குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நியூஸ் 7
தமிழ் செய்தியின் எதிரொலியால் செவிலியர்கள் மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு சேராப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிரந்தரமாக 108 ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள ஆலனூர் கிராமத்தைச் சேர்ந்த
பாக்கியராஜின் மனைவி மல்லிகா. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதையனையடுத்து மல்லிகாவை பிரசவத்திற்காக சேரப்பட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ் வண்டிக்கு அழைத்து உள்ளனர்.
பல முறை முயர்சித்தும் 108 ஆம்புலன்ஸ் கிடைக்காத காரணத்தினால் இருசக்கர வாகனத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். அப்போது மருத்துவர் இல்லை எனக் கூறிய செவிலியரிடம் பாக்கியராஜ் நாங்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறிய நிலையில் செவிலியர்கள் தாங்களே பிரசவம் பார்ப்பதாகவும் சுகப்பிரசவம் ஆகிவிடும் எனவும் கூறி ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே அனுமதித்தனர்.
இந்த நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தை எவ்வித அசைவும் இன்றி இருந்ததால் இறந்து பிறந்ததுள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.அப்போது குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குழந்தைக்கு மேல் சிகிச்சை அளிப்பதற்காக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இரண்டு மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்நிலையில் கருவிலேயே தொப்புள் கொடி அறுந்து விட்டதால் மல்லிகாவிற்கு தையல் போட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. இந்த சிகிச்சையின் போது தொடர்ந்து ரத்தக்கசிவு ஏற்பட்டு ரத்தம் நிற்காமல் வெளியேறியதால் மயக்கம் அடைந்த தாய் மல்லிகாவும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தாயும், சேயும் உயிரிழந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் முறையான மருத்துவர்கள் இல்லாமலும் , செவிலியர்கள் சிகிச்சை அளிக்கப்பட்டதுதான் இந்த உயிரிழப்பிற்கு காரணம் என குற்றம் சாட்டினர். அத்துடன் மருத்துவர் இல்லாமலேயே செவிலியர்கள் தொலைபேசியில் மருத்துவரிடம் தொடர்பு கொண்டு மகப்பேறு சிகிச்சை பார்த்து வந்ததாகவும் உடனடியாக மருத்துவமனைக்கு வருமாறு செவிலியர்கள் கூறிய நிலையில் மருத்துவமனைக்கு வந்த மருத்துவர் கர்ப்பிணி பெண்ணான மல்லிகாவையும் பச்சிளம் குழந்தையையும் பரிசோதித்துள்ளார்.
அப்போது பச்சிளம் குழந்தை இறந்த நிலையிலும் மல்லிகாவிற்கு அதிக ரத்தப்போக்கின் காரணமாக மயக்கமடைந்த நிலையில் இருந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தினால் அவரை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மல்லிகாவும் உயரிழந்துவிட்டதாகவும் நள்ளிரவு மல்லிகாவின் உறவினருக்கும் தகவல் தெரிவித்து இருக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த மல்லிகாவின் உறவினர்கள் சேராப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்பு அமர்ந்து தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக கல்வராயன் மலையில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு செல்லக்கூடிய அத்தியாவசிய வாகனங்களான அரசு பேருந்து பால் வண்டி ஆகியவை சாலையிலேயே நின்றது இது குறித்த தகவல் அறிந்து வந்த கரியலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 5 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தில் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உத்தரவிட்டதன் அடிப்படையில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக தாய் மற்றும் சேய் ஆகிய இருவரையும் போலீசார் அனுப்பி வைத்தனர்.
சேராப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து வந்த 108 ஆம்புலன்ஸ் தேவையானது இரவு நேரங்களில் செயல்படவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் குறை தீர்ப்பு கூட்டம் நாள் என்று மனு அளிக்கப்பட்டதை விரிவாக நியூஸ்7 தமிழில் சுட்டிக்காட்டி ஒளிபரப்பிய நிலையில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி மூன்று செவிலியர்களையும் சஸ்பெண்ட் செய்தார். மேலும் சேராப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த 108 ஆம்புலன்ஸ் சேவையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து அங்கேயே நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் இரவு பகல் பாராமல் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடர வேண்டும் என உத்தரவிட்டார். அதேபோல மாற்று செவிலியர்கள் மற்றும் இரண்டு மருத்துவர்கள் ஆரம்ப சுகாதார
நிலையத்திற்கு நியமிக்க ஏற்பாடு செய்து உள்ளதாகவும் தொடர்ந்து அப்பகுதி
மக்களுக்கு சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் சுகாதாரத் துறையின் சார்பில் மாவட்ட அலுவலர் ராஜா தெரிவித்த அடிப்படையில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இதில் செவிலியர்களில் அலட்சியத்தின் காரணமாக இரண்டு உயிர்கள் பலியாகி இருக்குமே எனில் விசாரணையில் கண்டறிந்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் உறுதியளித்துள்ளார்.







