தமிழகம் பக்தி செய்திகள்

கள்ளவாண்ட சுவாமி கோயிலில் கொதிக்கும் சோற்றை தலையில் ஊற்றி சுவாமியாடிகள் பரவசம்!

தூத்துக்குடியில் கள்ளவாண்ட சுவாமி கோயிலில் கொதிக்கும் சோற்றை அள்ளி தலையில் ஊற்றி சுவாமியாடிகள் ஆடிய நிகழ்ச்சி பக்தர்களை பரவசப்படுத்தியது.

தண்பொருநையாம் தாமிரபரணி தவழ்ந்தோடும் இன்றைய நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ராமாயண காலத்து சம்பவங்கள் பல நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மாய மானின் உருவம் கொண்டு வந்த மாரீசன் மறைந்த இடம், மாயமான்குறிச்சி என்று அழைக்கப்படுகிறது. சீதையை ராவணன் கவர்ந்து சென்றபோது, ராவணனுக்கும் ஜடாயுவுக்கும் நடந்த போரில் ஜடாயு வீழ்த்தப்பட்ட இடம் ஜடாயுதுறை என்று அழைக்கப்படுகிறது. சீதையைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக அனுமனின் தலைமையில் வானரப்படைகள் அணிவகுத்து நின்ற இடம் குரங்கணி என்று அழைக்கப்படுகிறது. இப்படி பல ராமாயண நிகழ்வுகள் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த இடத்தில் தான் வாலி வதமும் நடைபெற்றதாக மக்கள் நம்புகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தன் மனைவியை வாலியிடமிருந்து மீட்க நினைத்த சுக்ரீவன், அத்ரிமலையில் இருந்த ராமரைச் சந்தித்து உதவி கேட்பான். சுக்ரீவனுக்கு உதவ ராமர் ஒப்புக்கொள்வார். ஆனால், வாலியுடன் நேருக்கு நேர் நின்று போரிட்டால், தன் பலத்தில் பாதி வாலிக்குச் சென்றுவிடும் என்பதால், வாலியை மறைந்திருந்து வதம் செய்வார் ராமர். கீழே விழுந்த வாலி, ராமரை பார்த்து ”மறைந்திருந்து என்னை வீழ்த்திவிட்டாயே கள்ள ராமா, கள்ள ஆண்டவனே” என்று கதறியபடியே உயிர் நீப்பான்.

கிட்கிந்தா காண்டத்தில் வரும் இந்த வாலி வதம், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மணக்கரையில் நடந்ததாக கூறப்படுகிறது. பின் அந்த பகுதியில் ராமரின் நினைவாக கள்ளவாண்ட சுவாமி கோயில் எழுப்பப்பட்டு, மக்கள் வழிபட்டு வருகின்றனர். கள்ள ஆண்டவர் என்ற பெயரே மருவி, கள்ளவாண்டவர் என்று ஆனது. மணக்கரையில் உள்ள கள்ளவாண்ட சுவாமி கோயிலிலிருந்து பிடிமண் எடுத்துச் சென்று பல கள்ளவாண்டர் கோயில்கள் ஸ்ரீவைகுண்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதியில் கட்டப்பட்டன. வரலாற்றில் வாலி வதம் திறந்தவெளியில் நடைபெற்றதால், இந்தக் கள்ளவாண்டர் கோயில்கள் அனைத்தும் திறந்தவெளியிலேயே அமைந்திருக்கின்றன.

ஸ்ரீவைகுண்டம் அருகே அரசர்குளம் எனும் கிராமம் அமைந்துள்ளது. அங்கு இரண்டு வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதம் கடைசி செவ்வாய்கிழமை நடைபெறும் திருவிழா முக்கிய நிகழ்ச்சியாகும். திருவிழா அன்று காலை கருங்குளத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து சுவாமி கள்ளவாண்டருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. பிறகு நள்ளிரவு 12 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. சுவாமியாடி வேட்டைக்கு புறப்பட்ட பின் இரவு 1 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வேட்டைப்பானை நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்காக கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில் 36 பிரம்மாண்ட பானையில் பனை ஓலைகளைக் கொண்டு நெருப்பு மூட்டி, கஞ்சி காய்ச்சுவார்கள். கஞ்சி காய்ச்சும் நேரத்திலேயே நையாண்டி மேளம், உருமி மேளம் மற்றும் வில்லிசைப் பாடல்கள் மூலமாக கள்ளவாண்ட சுவாமியின் கதை சொல்லப்பட்டது. அந்தக் கதையை கேட்டு அருள் முற்றிய நிலையில் சுவாமியாடிகள், பானைக்கு அருகில் சென்று சுடு கஞ்சியை எடுத்துத் தன் தலையில் ஊற்றிக் கொண்டபடி அருளோடு ஆடினர். பக்தர்கள் கண் இமைக்காமல் இந்த காட்சியை கண்டு பரவசமடைந்தனர்.

வாலியை மறைந்திருந்து வீழ்த்திய காரணத்துக்காக, கொதிக்கும் கஞ்சியைத் தன் தலையில் கொட்டிக்கொண்டு, தனக்குத் தானே ராமர் தண்டனை கொடுத்துக்கொள்வதாக நம்பிக்கை.  கள்ளவாண்ட சுவாமி, திருடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர் வீட்டில் அடுக்கடுக்கான கஷ்டங்களைக் கொடுத்து மூன்றே நாள்களில் திருடியவரை அடையாளம் காட்டுவதுடன், திருட்டுப்போன பொருளை உரியவரிடம் சேர்த்துவிடுவாராம். எனவே, கள்ளவாண்ட சுவாமி கோயில் இருக்கும் ஊர்களில் திருட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார்கள் பக்தர்கள்.

கள்ளவாண்ட சுவாமிக்கு வேட்டைப்பானை போடுவதாக வேண்டிக் கொண்டால், விவசாயத்தில் அதிக மகசூல், கல்வியில் முன்னேற்றம், வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற வேண்டுதல்கள் நிறைவேறும் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் பக்தர்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நெல்லை, மதுரையில் ஜோகோ நிறுவனத்தின் கிளைகள் தொடங்கப்படும்- ஸ்ரீதர் வேம்பு

Jayasheeba

அதிமுக பிரமுகர் வீட்டில் 21 கிலோ தங்கம், 10 கார்கள் பறிமுதல்

Halley Karthik

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விரைவில் ஆன்லைன் விண்ணப்பங்கள்- மருத்துவ கல்வி இயக்குநரகம்

G SaravanaKumar