மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக வைகை ஆற்றில் மண் பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்றன.
மதுரை திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை சுமார் 31.30 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை அமைய உள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு ரூ.8500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. 18 நிலையங்களுடன் கூடிய இந்த மெட்ரோ ரயில் சேவையை செயல்படுத்துவதற்கான பணிகளை, சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை ஆர்.வி.அசோசியேட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
வரும் 2024-ல் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, 2027-ல் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வழித்தடங்களில் நில எடுப்பு மற்றும் நிலத்தேவை தொடர்பான சர்வே பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் இயங்கும் மேம்பால வழித்தடம் அமையும் பகுதிகளில், ஒவ்வொரு அரை கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் மண் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
வைகை ஆறு பகுதியில் பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. வசந்தநகர் முதல் கோரிப்பாளையம் வரை, பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டரும், மேல் பகுதியில் 26 கிலோ மீட்டரும் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் மதுரை வைகை ஆறு, ஆழ்வார்புரம், ஏ.வி.மேம்பாலம் பகுதிகளில் வைகை ஆற்றுக்குள் 30 மீட்டர் ஆழத்தில் மண் பரிசோதனை தொடங்கி நடைபெற்று வருகிறது.
மொத்தமாக ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 75 இடங்களில் 30 மீட்டர் ஆழத்திற்கு இயந்திரம் மூலம் மண் எடுக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 66 இடங்களில் மண் பரிசோதனை நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு இடத்திலும் மண்ணின் தன்மை மாறுபட்டுள்ளதால் அவை தனித்தனியாக சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும் 75 இடங்களில் பரிசோதனைக்காக மண் எடுக்கப்பட்டு, ஹைதராபாத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்பட உள்ளது.







