கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக அமைச்சர்கள், உயர் அலுவலர்களுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் இயங்கிவரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் படித்து வந்த மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடியில் இருந்து குதித்து உயிரிழந்ததாகக் கூறப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், ஜூலை 17ஆம் தேதி நடைபெற்ற இளைஞர்களின் போராட்டம் வன்முறையாக மாறியது. இதையடுத்து கள நிலவரம் குறித்து ஆராய அமைச்சர்கள் எ வ வேலு, அன்பில் மகேஸ், கணேசன், உள்துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோரை அங்கு அனுப்பிவைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அவர்கள் நேரில் ஆய்வு செய்த பின்னர், இன்று முதலமைச்சர் ஸ்டாலினுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனர். தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சரின் தனிச்செயலாளர் உதயச்சந்திரன், உளவுத்துறை ஏடிஜிபி தேவாசீர்வாதம், கல்வித் துறை உயர் அலுவலர்களும் பங்கேற்றனர். வன்முறைக்கான காரணம், விசாரணை, மாணவர் நலன், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் கேட்டறிந்து அறிவுறுத்தல்களை வழங்கினார்.
-ம.பவித்ரா








