செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் திமுக எம்பிக்கள் கனிமொழி, டிஆர் பாலு ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகின்ற ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த செஸ் போட்டிகளின் பெருமையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் பார்க்கபடுகிறது. பல்வேறு நாடுகளின் போட்டிகளுக்கு இடையே இந்தியா முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தும் வாய்ப்பை பெற்றிருக்கிறது.
இந்த போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு அரங்கம் அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்த பணிகளை நேற்று மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வரும் 20ம் தேதிக்குள் அனைத்து பணிகளும் நிறைவு பெறும் என அமைச்சர் நேற்று தெரிவித்திருந்தார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற இருக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், “செஸ் ஒலிம்பியாட்-2022” தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திரமோடிக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. மக்களவை உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் நாடாளுமன்ற அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து அழைப்பிதழை வழங்கினர்.








