கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டையில் மளிகை கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு ஒரு லட்ச ரூபாய் பணம்,பீடி,சிகரெட் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள பு,மாம்பாக்கத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். பழனிவேல் எப்போதும் போல நேற்றிரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.
மறுநாள் காலையில் வழக்கம்போல் கடையை திறந்துப்பார்த்தப்போது கடையின் கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு கடும் அதிர்ச்சிக்குள்ளாகினார். கடையின் பின்பக்க சுவரை உடைத்து கடையின் உள்ளே வந்த மர்ம நபர்கள் ஒரு லட்ச ரூபாய் பணம், பீடி, சிகரெட்டுகளை திருடிச்சென்றது தெரிய வந்தது.இச்சம்பவம் குறித்து பழனிவேல் உடனடியாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மளிகை கடையின் பின்பக்க சுவரை உடைத்து மர்ம நபர்கள் திருடிச்சென்றது அப்பகுதி மக்களிடயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.








