விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வசிக்கும் பகுதியில் பாஜகவினர் ஒன்பதாண்டு கால சாதனை விளக்க பிரசுரங்களை வழங்க முயற்சித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சென்னை, மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகில் உள்ள மீனாம்பாள்புரம் பகுதி மக்களிடம், தென் சென்னை மாவட்ட பாஜக தலைவர் காளிதாஸ் தலைமையில் பாஜக உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டோர் பாஜகவின் ஒன்பது ஆண்டுகால சாதனை விளக்க
பிரசுரங்களை வழங்க சென்றனர்.
பாஜகவினர் முன்னதாகவே மயிலாப்பூர் காவல் நிலையத்தில் தகவல் அளித்து அனுமதி கேட்டு காவல்துறையின் உதவியுடன் அந்தப் பகுதிக்கு சென்றனர்.
ஆனால் அம்பேத்கர் பாலம் அருகில் உள்ள பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த உறுப்பினர்கள் அதிகம் இருக்கும் பகுதி என்பதால் இந்த பகுதிக்குள் பாஜகவினர்
அவர்களின் பிரசுரங்களை கொடுக்கக்கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள்
கட்சியினர் அவர்களை தடுத்து நிறுத்த கற்களை வீசியும், சோடா பாட்டில்களை வீசியும்,
பாஜகவை சேர்ந்த மகளிர் உறுப்பினர்களை கொச்சையாக திட்டியதாகவும் பாஜகவினர் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் அனுமதி மறுக்கப்பட்டதால் மயிலாப்பூர் சந்திப்பு பகுதியில் இருந்து ஊர்வலமாக மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு வந்து பாஜகவினர் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க.
வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளதாக தென் சென்னை பாஜக மாவட்ட தலைவர்
காளிதாஸ் தெரிவித்தார்.
மேலும், மற்ற கட்சியினர் தங்கள் பகுதிக்கு வர கூடாது என்று எப்படி சொல்லலாம் மக்கள் ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் அவர்கள் விருப்பம் அதை தடுக்க முயற்சிப்பது முறையல்ல நாங்கள் எப்போதும் எந்த கட்சியினரையும் தடுத்தது இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
ரெ. வீரம்மாதேவி







