கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடல் நல்லடக்கம்

கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் இன்று அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.  கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13ம் தேதி மர்மமான முறையில்…

கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் இன்று அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கடந்த 10 நாட்களாக உடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றுக்கொள்ள அவரது பெற்றோர் நேற்று சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை காலை 6.50 மணியளவில் பெற்றோர் பெற்றுக் கொண்டனர். ஸ்ரீமதியின் தாயார் கதறி அழுதபடியே கையெழுத்துப்போட்டு தனது மகளின் உடலை பெற்றுக் கொண்டார். பின்னர், மாணவி ஸ்ரீமதியின் உடலுக்கு மாலையணிவித்து அமைச்சர் கணேசன், அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் இருந்து ஸ்ரீமதியின் உடல், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூருக்கு காலை 8.30 மணியளவில் கொண்டு செல்லப்பட்டது. இறுதிச்சடங்கில் வெளியூர் மக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்ட நிலையில், மாணவியின் உடலுக்கு உறவினர்கள், ஊர்மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

மாணவிக்கு பிடித்தமான உயிரியியல் பாடப் புத்தகம், மாணவியின் உடல் மீது வைக்கப்பட்டது. பின்னர் மாணவியின் உடல் ஊர்வலமாக மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் கண்ணீர் மல்க ஊர்வலமாக சென்று மாணவிக்கு பிரியா விடை அளித்தனர். மயானத்தில் மாணவியின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன், அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் மௌன அஞ்சலி செலுத்தினர். பின்னர் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு மாணவியின் உடல், அவருக்கு பிடித்த உயிரியியல் பாடப் புத்தகத்தோடு சேர்த்து நல்லடக்கம் செய்யப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி.கணேசன், மாணவி மரணம் தொடர்பாக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்துள்ளார். தனது மகளுக்கு நேர்ந்தது போன்று இனி வேறு எந்த மாணவிக்கும் நடக்க கூடாது என மாணவி ஸ்ரீமதியின் தந்தை ராமலிங்கம் உருக்கத்துடன் தெரிவித்தார். தனது மகளை புதைக்கவில்லை என்றும் விதைத்திருக்கின்றேன் என்றும் அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.