பெண்களுக்காக குரல் கொடுத்த எனது திரைப்படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று இயக்குநர் வசந்த் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
நடிகைகள் லட்சுமி பிரியா, காளிஸ்வரி சீனிவாசன், பார்வதி ஆகியோர் நடிப்பில் தயாரான படம் சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும். இந்தப் படம் ஓடிடி தளமான sony liv இல் வெளியானது.
இந்தப் படத்தை இயக்குநர் வசந்த் இயக்கியுள்ளார். இவர், ரிதம், மூன்று பேர் மூன்று காதல், ஆசை, அப்பு, சத்தம் போடாதே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஆவார்.
இவர் இயக்கும் கதைகள் தனித்துவமாக இருக்கும். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது.
அந்த வகையில் சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் படமும் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. படம் வெளியான பிறகு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். ஏகாம்பரம், வைடு ஆங்கிள் ரவிசங்கர் ஆகியோர் ஒளிப்பதிவு செய்தனர். இந்தப் படத்திற்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருடன் நமது செய்தியாளர் நாகராஜன் கலந்துரையாடினார்.
அப்போது, இயக்குநர் வசந்த் கூறுகையில், “பெண்களுக்காக குரல் கொடுத்த திரைப்படத்திற்கு தேசிய அளவிலான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இந்நேரம் எனது குருநாதர் கே. பாலச்சந்தர் என்னுடன் இருந்திருந்தால் என்னை “படவா ராஸ்கல், நான் இருக்கும் போது வாங்காம இப்ப வாங்குறியா” என சொல்லி பாராட்டி இருப்பார்.
கேளடி கண்மணி படம் இயக்கிய போது இருந்த அதே பயம் தான் இன்னும் என்னுள் இருக்கிறது. இன்னும் 400 படம் எடுத்தாலும் இதே போல தான் இருக்கும்.
OTT தளம் என்பது இந்த படம் போன்ற வித்தியாசமான கதை களத்திற்கு கிடைக்கப் பெற்ற பெரிய வாய்ப்பாக நான் கருதுகிறேன் என்றார் வசந்த்.
தமிழில் சிறந்த படம், சிறந்த துணை நடிகை, சிறந்த படத்தொகுப்பு ஆகிய 3 விருதுகளை இந்தப் படம் தட்டிச் சென்றது.
சிறந்த துணை நடிகைக்கான விருதுக்கு லட்சுமி பிரியாவும், சிறந்த படத்தொகுப்பான விருதுக்கு ஸ்ரீகர் பிரசாத்தும் தேர்வு செய்யப்பட்டனர்.








