கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி உடல் பத்தாவது நாளாக வைக்கப்பட்டுள்ளது. உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசே உடல் நல்லடக்கம் செய்வது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
அரசு மருத்துவமனை முன்பு இரண்டு எஸ்.பி.கள்,நான்கு டிஎஸ்பிக்கள் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, மாணவி உயிரிழப்புக்கு நீதி கேட்டு கனியாமூரில் உள்ள சக்தி மேல்நிலை பள்ளி வளாகத்துக்கு முன் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருக்கும் அவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கல்வீச்சு சம்பவங்கள் அரங்கேறின. இதில் போலீஸார் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்தில் இருந்து வாகனங்களுக்கு தீ வைத்தனர்.
காவலர்களின் வாகனங்களையும் அடித்து நொறுக்கி போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உயர்நீதிமன்ற உத்தரவு பேரில் மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சிபிசிஐடி அதிகாரிகளும் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.








