சிங்கப்பூரில் தமக்கு ஹோட்டல் இருப்பதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சவால் விடுத்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பரப்புரைகள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக சார்பில் போட்டியிடும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கரிசல்குளம், சிவந்திப்பட்டி, துறையூர், கிழவிபட்டி, கெச்சிலாபுரம், செண்பகப்பேரி, அன்னை தெரசா நகர், உள்ளிட்ட இடங்களில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவருக்கு பொதுமக்கள் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுமக்களிடையே பேசிய அவர், அமமுகவினர் தம்மைப் பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி வருவதாகத் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தில் தனது சொத்து விபரங்களை வெளிப்படையாக கூறியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, தம்மை பற்றிய அவதூறு பேச்சை திரும்பப் பெறவில்லை என்றால் வழக்கு தொடர்வேன் என்றும் எச்சரித்தார்.







