தமிழகத்தில் சாதனையான ஆட்சி தொடர அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு அமைச்சரும், கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளருமான கடம்பூர் ராஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவில்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட கார்த்திகைபட்டி, குமரபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து வாக்குசேகரித்த கடம்பூர் ராஜூ, மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கட்சியாக அதிமுக இருப்பதாக தெரிவித்தார். சாதனையான ஆட்சி தொடர வேண்டுமா அல்லது வேதனையான ஆட்சி வேண்டுமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கோவில்பட்டி தொகுதி கடம்பூர் ராஜூ கூறினார்.
மேலும், தேவேந்திரகுல வேளாளர் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுகின்ற போது இங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 39 திமுக மற்றும் கூட்டணி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர் என்றும் இதுதான் அவர்களின் நிலை என்று கூறிய கடம்பூர் ராஜூ திமுகவினர் ஓட்டு கேட்டு வந்தால் அவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும் என கூறினார்.







