நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும் என்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்தார்.
முஸ்லிம்கள் தங்களின் இறைத் தூதரகாக கருதும் நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் செய்தித்தொடர்பாளர்களாக இருந்த நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோர் சர்ச்சை கருத்து தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, நுபுர் சர்மாவை பொறுப்பிலிருந்து பாஜக இடைநீக்கம் செய்தது. நவீன் ஜிண்டாலை கட்சியை விட்டே நீக்கியது. அவர்கள் இருவரும் தங்களின் கருத்துக்காக மன்னிப்பு கோரினர்.
இருப்பினும், முஸ்லிம் நாடுகள் இந்தக் கருத்துக்கு கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தது. இது இந்தியாவின் கருத்து கிடையாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.
இந்த சூழ்நிலையில், ஈரானின் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமிர்-அப்துல்லாஹியன் இந்தியாவுக்கு வந்துள்ளார். பிரதமர் மோடியையும் அவர் சந்தித்துப் பேசினார். பிரதமர் அவருக்கு மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.
நீண்ட காலமாக இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் கலாசார ரீதியிலான நட்புறவை பிரதமர் மோடி மேற்கோள் காட்டினார். இந்தப் பயணத்தின்போது அமீர், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து வெளியான விவகாரத்தில் இந்திய அரசின் நிலைப்பாட்டையும் மக்களின் ஆதரவையும் பாராட்டி பேசினார். இதையடுத்து, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறுகையில், “நபிகள் நாயகத்தின் மீது இந்திய அரசு எப்போதும் உரிய மரியாதை கொண்டிருக்கிறது. அவர் தொடர்பாக சர்ச்சை கருத்து கூறியவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பிறருக்கு அது பாடமாக அமையும்” என்றார்.
-மணிகண்டன்