தமிழக காவல்துறையில் காவலர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுப்படி எவ்வளவு?
யாருக்கெல்லாம் கிடைக்கிறது என்பதனை இந்த தொகுப்பு மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு மாநிலத்தை பாதுகாக்கும் பணி என்பதில் முக்கிய பணி காவல்துறையுடையது.
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம். இதனால்
காவல்துறையின் பணி என்பது மிகவும் முக்கியமானது. ஆனால் அங்கு காவலர்களுக்கு
வழங்கப்படும் உணவு தரமில்லாமல் இருப்பதாக கூறி உத்தரபிரதேச மாநில பிரோசாபாத்
காவலர் மனோஜ் குமார் என்பவர் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரபிரதேச காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்தியாவிலேயே தலைசிறந்த காவல்துறை என பெயரெடுத்துள்ள தமிழக
காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்களுக்கு உணவுப்படி எந்தெந்த வகைகளில்
வழங்கப்பட்டு வருகிறது என்பதனை பார்க்கலாம். தமிழக காவல்துறையில் 1,32,101
காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை பணியாற்றி வருகின்றனர்.
தமிழக காவல்துறை 4 மண்டலங்களாகவும், 9 காவல் ஆணையரகங்களாகவும் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 38 காவல் மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. காவல் ஆணையரகங்கள் காவல் ஆணையர் தலைமையிலும், மாவட்ட காவல்துறை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலும் செயல்பட்டு வருகிறது. தமிழக காவல்துறையில் காவலர்கள் முதல் காவல் ஆய்வாளர்கள் வரை பணியாற்றி வருபவர்களுக்கு உணவுப்படி என்பது வழங்கப்பட்டு வருகிறது.
காவலர்கள் முதல் காவல் ஆய்வாளர்கள் வரையிலான காவல்துறையினருக்கு சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட 9 மாநகர காவல் ஆணையரகங்களில் பணியாற்றும் சட்டம்- ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் காவலர்களுக்கு தினமும் ரூ.300 வீதம் தினமும் உணவுப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. தினமும் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு, ஊர்வலங்கள், போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு பணிகளுக்காக ஈடுபட வேண்டி இருப்பதால் உணவுப்படி தினமும் வழங்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் மாவட்ட காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்கள் முதல் காவல்
ஆய்வாளர்கள் வரை பணியாற்றுபவர்களுக்கு தினமும் உணவு வழங்கப்படுவதில்லை.
போராட்டங்கள், முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்குதல், ஊர்வலங்கள்
போன்ற பணிகளில் ஈடுபடும்போது மட்டுமே ரூ. 250 வீதம் உணவுப்படியாக வழங்கப்பட்டு
வருகிறது.
ஆனால் மாவட்டங்களில் பணியாற்றி வரும் காவலர்கள் முதல் காவல் ஆய்வாளர்கள் வரை
மாவட்ட காவல்துறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், நீதிமன்றங்கள், சம்மன்
கொடுக்க செல்லுதல் உள்ளிட்ட இடங்களுக்கு அலுவலகப்பணியாக அடிக்க சென்று வர
வேண்டி இருப்பதால் பயணப்படி மாநகர காவல்துறையினரை விட கூடுதலாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு உணவுப்படியை தமிழக காவல்துறை டிஜிபி தலைமை அலுவலக தலைமையிடத்தில் இருந்து உணவுப்படி பிரித்து மாநகர காவல் ஆணையரகங்களுக்கும், மாவட்ட காவல்துறைக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. பணிக்கு வந்தால் மட்டுமே இந்த
உணவுப்படி வழங்கப்படும். மாதத்தில் மொத்தமாக கணக்கெடுத்தே உணவுப்படி
வழங்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.







