காளி பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் இயக்குநர் லீனா மணிமேகலைக்கு மேற்குவங்க எம்பி மஹூவா மொய்த்ரா ஆதரவு தெரிவித்துள்ளார்.
செங்கடல், மாடத்தி போன்ற படங்களால் கவனத்தை ஈர்த்த திரைப்பட இயக்குநரான லீனா மணிமேகலை, காளி என்ற பெயரில் டாகுமென்ட்ரி ஒன்றை தயாரித்து வருகிறார். அதில் அவரே காளியாக நடித்து இயக்கி இருக்கிறார்.
கனடாவின் யோர்க் பல்கலைக்கழகம் விடுத்த அழைப்பை ஏற்று கனடா சென்றுள்ள லீனா மணிமேகலை, அங்குள்ள டொரோண்டோ மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்திற்காக காளி படத்தை உருவாக்கி வருவதாக அவர் கூறியுள்ளார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகியது. அதில், காளி வேடத்தில் இருப்பவர் புகைப்பிடித்துக்கொண்டும், தன்பாலின ஈர்ப்பாளர்களின் கொடியை ஒரு கையில் பிடித்துக்கொண்டும் இருப்பதுபோன்று அந்த படம் இருந்தது.
இதற்கு கனடாவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இருப்பதாகவும், இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கனடா அரசை இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
லீனா மணிமேகலைக்கு எதிராக உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லி காவல்துறை சார்பில் வழக்கு பதிய பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா, லீனா மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தான் அறிந்த காளி, அசைவம் உண்ணக்கூடியவர் என்றும் மது அருந்தக்கூடியவர் என்றும் குறிப்பிட்டுள்ள மஹூவா மொய்த்ரா, சில இடங்களில் பக்தர்கள் காளிக்கு மதுவை படையலாக வைக்கும் வழக்கம் உள்ளது என்றும் கூறியுள்ளார். அதேநேரத்தில் சில இடங்களில் இது மத நிந்தனையாக பார்க்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உங்களுக்கான கடவுளை நீங்கள் கற்பனை செய்துகொள்ள உரிமை இருக்கிறது என்றும் மஹூவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.
எதிர்ப்புகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள லீனா மணிமேகலை, ஒரு மாலைப்பொழுதில் கனடாவின் டோரோண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள்தான் படம் என்றும் படத்தைப்பார்ப்பவர்கள் “arrest leena manimekalai” என்று hashtag போடாமல் love you leena manimekalai” என hashtag போடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அதோடு, தனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை என்றும் இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புவதாகவும், அதற்கான விலை என் உயிர் தான் என்றால் தரலாம் என்றும் லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார்.











