கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

G.K.வாசனை அழைக்கும் K.S அழகிரி- காங்கிரஸுடன் இணையுமா தமாகா?


ஜோ மகேஸ்வரன்

கட்டுரையாளர்

அதிமுகவிற்காக ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டுக் கொடுத்து, கூட்டணியில் இணக்கத்தை காட்டியுள்ளது தமிழ் மாநில காங்கிரஸ். தமாக மீண்டும் தாய்க்கட்சியோடு இணைய வேண்டும் என்று அழைப்பை விடுக்கிறார் கே.எஸ்.அழகிரி. என்ன காரணம்… என்ன நடக்கும்…? பார்க்கலாம்….

தமாகா தொடக்கம்: 

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த 1991ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியாக காங்கிரஸ் அமர்ந்தது. ஆனால், முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் செயல்பாடுகளால் ஏற்பட்ட எதிப்பலை, மாநில நிர்வாகிகளின் விருப்பத்திற்கு மாறாக காங்கிரஸ் தலைமை 1996ம் ஆண்டு தேர்தலிலும் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி என்கிற முடிவு எடுத்ததால், கட்சி மேலிடத்தின் இந்த முடிவை எதிர்த்து, மூத்த தலைவர் ஜி.கே மூப்பனர், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். ப.சிதம்பரம், அருணாச்சலம் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் அவருடன் சென்றனர்.gk

திமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. நடிகர் ரஜினிக்காந்தும் இந்த கூட்டணியை ஆதரித்தார். குறிப்பாக, 1996ம் ஆண்டு தமிழ்நாடு  சட்டபேரவைத் தேர்தலுடன் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலும் நடைபெற்றது. திமுக – தமாகா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியில் இருந்து, சட்டப்பேரவைக்கு 39 பேரும், மக்களவைக்கு 20 பேரும் சென்றனர். ஆனால், 2001ம் ஆண்டு நடைபெற்ற அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி மாறியது. தமிழ் மாநில காங்கிரஸ், அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. தமாகவினர் 23 பேர் வெற்றியும் பெற்றனர்.

காங்கிரஸுடன் இணைப்பு:

அடுத்த சில மாதங்களில் ஜி.கே.மூப்பனார் உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து அவரது மகன் ஜி.கே.வாசன் கட்சியின் தலைவரானார். அவர், 2002ல் தமாகாவை இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார். இதையடுத்து, 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்தார். காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்த ராகுல் காந்தியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால், 2014ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகிய ஜி.கே.வாசன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மீண்டும் தொடங்கினார். பீட்டர் அல்போன்ஸ், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் உடன் சென்றனர். இந்த முறை பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட படிப்படியாக பலரும் தமாகாவில் இருந்து விலகினர். மீண்டும் காங்கிரஸ், அதிமுக என சேர்ந்தனர்.

மக்கள் நலக்கூட்டணி:

2016ம் ஆண்டு சட்டபேரவைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் 26 இடங்களில் தமாகா போட்டியிட்டது. தொடர்ந்து, 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டது. சைக்கிள் சின்னத்தில் தொடங்கிய தமாகா இப்போது ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டது. இதைத்தொடர்ந்து 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டது. மேற்கண்ட 3 தேர்தல்களிலும் ஒரு இடத்திலும் தமாகா வெற்றி பெறவில்லை. பின்னர் அதிமுக ஆதரவுடன் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தற்போது உள்ளார் ஜி.கே.வாசன்.

அழைப்பு விடுக்கும் காங்கிரஸ்:

இந்நிலையில, காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘காங்கிரஸ் கட்சி என்றால் காமராஜரும் முப்பனாரும் மட்டுமே நினைவுக்கு வருவார். அன்றைக்கு (1996ல்) இருந்த கட்சித் தலைமை அரசியல் ரீதியில் தவறான முடிவுகளை எடுத்ததால், ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், முப்பனார் தமாகாவைத் தொடங்கினார். ஆனால், ஒரு போதும் அவர் காங்கிரஸை விட்டு விலகவில்லை. என் அன்புத்தலைவர் ஜி.கே.வாசனைக் கேட்டுக்கொள்கிறேன். அவர் இந்திய தேசிய காங்கிரஸில் இணைய வேண்டும். அவர் இணைந்தால், அவரது தலைமையின் கீழ் பணியாற்ற தயாராக இருக்கிறேன்’ என்றார்.

தொடரும் யூகம்:

கடந்த 2016ம் ஆண்டிலிருந்து ஜி.கே.வாசன் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேரப்போகிறார் என்றும் கடந்த சில ஆண்டுகளாக பாஜக அரசில் மத்திய அமைச்சராகப் போகிறார் என்றும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகின்றன. ஆனால், இரண்டும் தற்போது வரை நடக்கவில்லை. குறிப்பாக, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நியூஸ் 7 தமிழின் பிரத்யேக நேர்காணலில் ஜி.கே.வாசன் குறித்த கேள்விக்கு, ’அவர் பாஜகவிற்கு மிக நெருக்கமாக சென்று விட்டார். இணைப்பு குறித்து காலம்தான் முடிவு செய்யும்’ என்றார் கே.எஸ்.அழகிரி. அவர்தான் தற்போது இணைய வேண்டும் என்று பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். கே.எஸ்.அழகிரியின் இந்த அழைப்பு அரசியல் முக்கியத்துவம் பெற்றதாக மாறியுள்ளது.

 

இதன் வீடியோ செய்தி…  https://youtu.be/-BEVc4mswuc

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சுற்றுலா சென்றவர்களை இடையூறு செய்த முதலை – வைரலாகும் வீடியோ

Web Editor

குமுளி-தேக்கடி பகுதிகளில் 144 தடை உத்தரவு : மின்சாரம் துண்டிப்பு

Web Editor

வலசை பறவைகளின் வாழிடம் தப்பியது எப்படி ?

Halley Karthik