மருத்துவ படிப்புகளுக்குரிய நுழைவுத் தேர்வான நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூகநீதியை நிலைநாட்டும் வரலாற்றுக் கடமை தமிழ்நாட்டிற்கு எப்போதும் உண்டு எனவும் அதை நிறைவேற்றும் வகையில் நீட் தேர்வு முறையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அகற்றிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு நீட் தேர்வு முறையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், இதற்கு மாற்று ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும், அவற்றிற்கான சட்ட வழிமுறைகள் பற்றியும் ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு ஆய்வு செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.







