அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் பேஸ்புக் கணக்கை 2 வருடம் சஸ்பெண்ட் செய்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
நடந்த முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்டு டிரம்ப் தோல்வியை தழுவினார். ஜோ பைடன் வெற்றிபெற்றதை அடுத்து, அதை அங்கீகரிப்பதற்கான நடைமுறைகள் அமெரிக்கா நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடைபெற்றது. ஆனால், தோல்வியை ஒப்புக் கொள்ளாத டிரம்ப், தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதை, சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
இதையடுத்து அவர் ஆதரவாளர்கள், கேப்பிட்டல் கட்டிடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இது உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சமூகவலைதளப் பக்கங்கள் டிரம்பின் கணக்குகளை முடக்கின.
ட்விட்டர் நிறுவனம் டிரம்பின் கணக்கை நிரந்தரமாக தடை செய்தது. தற்காலிகமாக தடை விதித்திருந்த பேஸ்புக் நிறுவனம், இப்போது அவர் பேஸ்புக் கணக்குக்கு 2 ஆண்டுகள் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. அதாவது, 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை முடக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை குறித்து கருத்து தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப், இது, தனக்கு வாக்களித்தவர்களுக்கு செய்யப்பட்ட அவமதிப்பு எனக் கூறியுள்ளார்.







