12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டிகள் வரும் வருகிற 21-ந்தேதி வரை நடைபெற உள்ளன. இத்தொடரில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன் படி ‘ஏ’ பிரிவில், இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, மலேசியா ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, மலேசியா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
அதன் படி, தொடக்க ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை எதிர்கொண்ட இந்திய அணி, 234 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. தொடர்ந்து இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை இன்று எதிர் கொண்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 46.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழந்து 240 ரன்களை எடுத்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஆரோ ஜார்ஜ் 85 ரன்களும், கான்ஷிக் சவுகான் 46 ரன்களும், ஆயுஷ் மாத்ரே 38 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் முகமது சய்யாம், அப்துல் சுபான் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதனை தொடர்ந்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.







