அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி…

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடரவேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து கடந்த மாதம் 25-ந்தேதி உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் பிறப்பிக்கின்றனர். இதனால், ஓ.பிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் இடையே எதிர்பார்ப்பும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.