ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் ஆவது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை – சி.பி ராதாகிருஷ்ணன் பெருமிதம்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக என்னை நியமித்திருப்பது , தமிழகத்திற்கு மத்திய அரசு அளித்திருக்கும் இன்னொரு பெருமை என சி.பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 13 மாநிலங்களுக்கான ஆளுநர்களை நியமித்து…

ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக என்னை நியமித்திருப்பது , தமிழகத்திற்கு மத்திய அரசு அளித்திருக்கும் இன்னொரு பெருமை என சி.பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 13 மாநிலங்களுக்கான ஆளுநர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக ரமேஷ் பயாஸ் பணியாற்றி வந்த நிலையில், அந்த பதவியில் பாஜக தேசிய செயலாளரான சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பாஜகவின் தலைவராக இருந்துள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், இரண்டு முறை கோவை தொகுதி மக்களவை உறுப்பினராக பதவி வகித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் 2016-ஆம் ஆண்டு முதல் 2019 -ஆம் ஆண்டு வரை தேசிய கயிறு வாரியத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களை ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக இன்று நியமனம் செய்துள்ளதாக குடியரசு தலைவர் மாளிகையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது கடமைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்திட விழைவதாகவும் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

இவரை தொடர்ந்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும் ”ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பாஜகவின் மூத்த தலைவரும்,நான் பெரிதும் போற்றும் அண்ணன்,சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டேன் . “பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அன்பிற்குரிய அண்ணன் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த மன மகிழ்ச்சி அளிக்கிறது. அவரின் தேச நலப் பணிகள் மென்மேலும் சிறக்க மனமார வாழ்த்துகிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக முன்னாள் தலைவரும், தேசிய செயலாளருமான சி.பி.ராதாகிருஷ்ணன், தான் தமிழகத்திலிருந்து ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது தமிழகத்திற்கு மத்திய அரசு அளித்திருக்கும் இன்னொரு பெருமை எனவும், ஜார்கண்ட் மாநிலத்தில் வாழும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை மேம்பட பணியாற்றுவேன் எனவும் கூறி உள்ளார்.

மேலும் ஜார்கண்ட் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இணைப்பு பாலமாக பணியாற்ற உள்ளதாக தெரிவித்த அவர், ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது அரசியலின் பரிணாம வளர்ச்சியாக பார்க்கிறேன். தமிழகத்திலிருந்து மீண்டும் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் மத்திய அரசு தமிழகத்தின் மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்துகிறது என கூறினார்.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.